பாபா ராம்தேவ் Vs இந்திய மருத்துவ சங்கம் - தொடர் மோதலும் ரூ.1000 கோடி நஷ்டஈடு நோட்டீஸும்!

பாபா ராம்தேவ் Vs இந்திய மருத்துவ சங்கம் - தொடர் மோதலும் ரூ.1000 கோடி நஷ்டஈடு நோட்டீஸும்!
பாபா ராம்தேவ் Vs இந்திய மருத்துவ சங்கம் - தொடர் மோதலும் ரூ.1000 கோடி நஷ்டஈடு நோட்டீஸும்!

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி ரூ.1,000 கோடி நஷ்டஈடு கோரியுள்ளது. இரு தரப்புக்கும் ஆரம்பம் முதல் நடந்த மோதல்கள் தொடங்கி மன்னிப்பு படலம் வரையிலான முழு பின்புலத்தை சற்றே விரிவாக பார்போம்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தொடர்ந்து கொரோனா மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருப்பது கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பாதிப்பால் கடந்த சில வாரங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் சமீபத்தில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அலோபதி மருத்துவம் குறித்து பேசிய கருத்துக்கள் இந்திய மருத்துவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையாக மாறியது.

அந்த நிகழ்வில், "இந்தியாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான ஒன்று. கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பதில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் தோல்வி கண்டுள்ளன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இழந்ததுதான் மிச்சம். ஆகவே, அலோபதி முறையை முற்றிலும் நீக்கிவிட்டு இந்தியாவில் ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்" என்று பேசினார். இதைவிட ஒருபடி மேலே சென்று இதே நிகழ்வில் மருத்துவர்களை 'கொலையாளிகள்' என்று சுட்டிக்காட்டி பேசியிருந்தார் பாபா ராம்தேவ்.

இவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள், மீடியாக்களில் வெளியாக, சர்ச்சையானது விவகாரம். இதையடுத்து உடனடியாக பாபா ராம்தேவின் பேச்சுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், "கொரோனா நோய் கடுமையாக பரவி வரும் இந்த பெருந்தொற்று காலத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிரை மதிக்காது மக்களை காக்க இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவர்களை கொலையாளிகள் என்றும், அவர்கள் மேற்கொள்ளும் அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. அந்த முறையால் பலரின் உயிரை மருத்துவர்கள் பறித்துள்ளனர் என்று தன்னை விளம்பரத்திக் கொள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து மருத்துவர்கள் மீது பாபா ராம்தேவ் பழி சுமத்துவது வேதனை தரும் விஷயம். இந்தப் பொய் குற்றச்சாட்டை தெரிவித்த அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பாபா ராம்தேவ் மீது மருத்துவர்கள் ஆராய்ச்சி குழுவின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கடுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படி கடும் எதிர்வினைகள் கிளம்பியதை அடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் இருந்து பாபா ராம்தேவ் பேசிய கருத்துகள் நீக்கப்பட்டது. மேலும், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உடனடி விளக்கம் ஒன்றை கொடுத்தது. அதில், "நாங்கள் அலோபதி மருத்துவத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. அன்று நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் வாட்ஸ்அப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே படித்தார். இதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவரின் கருத்து கிடையாது. இணையத்தில் இதுதொடர்பாக உலா வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது" என்று கூறியிருந்தது பதஞ்சலி நிறுவனம்.

இந்த விளக்கத்துக்கு பின்பும் சர்ச்சை ஓயவில்லை. இதனிடையே, மத்திய அரசின் அறிவுறுத்தலின் எதிரொலியாக, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் பாபா ராம்தேவ். ஆனால், அவர் ஒய்வதாக இல்லை. ஆங்கிலம் மருத்துவம் தொடர்பாக 25 கேள்விகளைப் பட்டியலிட்டு, இந்த நோய்களுக்கெல்லாம் ஆங்கில மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் என்னென்ன என்று சமூக வலைதளப் பதிவு மூலம் வினவியிருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன், 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஐ.எம்.ஏ. (உத்தராகண்ட்) செயலாளர் அஜய் கன்னனாவின் சார்பாக இந்த விவகாரத்தில் ஆறு பக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்திற்கும், பாபா ராம்தேவ் மற்றும் அவரின் பதஞ்சலி நிறுவனத்திற்கும் சமீப காலமாக மோதல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, கொரோனாவின் முதல் அலையின் போது பதஞ்சலியின் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து என பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்த அதனை அதிரடியாக தடை செய்யப்பட்டது.

இந்த தடை பின்னணியில் மருத்துவ சங்கம் இருப்பதாக அப்போதே கூறப்பட்டது. இப்போது இதேபோல் சில தினங்கள் முன் கடந்த ஆண்டு வெளியிட்ட கொரோனில் மருந்தை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் ராம்தேவ். அதுவும் மத்திய அமைச்சர்களை முன்னிலையில் வைத்து உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது என்று கூறி அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று மருத்துவர் சங்கம் போர்க்கொடி தூக்கி இருக்கிறது. உடனடியாக இந்த மருந்துக்கு கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை வாபஸ் வாங்க வேண்டும்; இல்லையென்றால், பதஞ்சலி நிறுவனம் மீதும் ராம்தேவ் மீதும் மருத்துவ சங்கம் மூலம் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com