உத்தரப்பிரதேசத்தில் களேபரம் - கோரக்பூர் கோயிலில் என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் களேபரம் - கோரக்பூர் கோயிலில் என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசத்தில் களேபரம் -  கோரக்பூர் கோயிலில் என்ன நடந்தது?

கோயிலுக்குள் நுழைய முயன்ற ஐஐடி பட்டதாரியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்களை அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள கோரக்பூர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலின் தலைமை பூசாரியாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இருப்பதால், அந்தக் கோயிலை சுற்றிலும் எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் அந்தக் கோயிலை நோக்கி குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோஷத்தை எழுப்பியபடி இளைஞர் ஒருவர் ஓடிச் சென்றார். கோயிலுக்குள் நுழைய முயன்ற அவரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து அவர் போலீஸாரை தாக்கினார்.

இதில் இரண்டு போலீஸாருக்கு தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த மற்ற போலீஸாரும், பொதுமக்களும் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களையும் அந்த நபர் அரிவாளை கொண்டு தாக்க முயன்றார்.

பின்னர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவர் மீது கற்களை வீசி தாக்கினர். கல்வீச்சில் காயமடைந்து நிலைக்குலைந்த அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். இதில் அவரது பெயர் அகமது முர்தாசா அப்பாஸி (26) என்பதும், மும்பை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதும் தெரியவந்தது. ஐஐடி பட்டதாரி ஒருவர் மத கோஷம் எழுப்பியபடி கோயிலுக்கு வந்தது எதற்காக? அங்கிருந்த பக்தர்களை தாக்கும் நோக்கத்துடன் வந்தாரா? தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணங்களில் போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோரக்பூர் ஏடிஜிபி அகில் குமார் கூறுகையில், "அப்பாஸியிடம் இருந்து செல்போனும், லேப்டாப்பும் பறிமுதல் ெசய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் எந்த சந்தேகத்தையும் புறக்கணிக்க முடியாது. தீவிரவாத நடவடிக்கையாக கூட இது இருக்கலாம். அந்தக் கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

இதனிடையே, அகமது அப்பாஸி தாக்கியதில் படுகாயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

courtesy: ndtv

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com