கொல்கத்தாவில் அடுத்த கொடூரமா? IMM மாணவர் விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை எனப் புகார்!
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் சட்ட மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிய நிலையில், அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IMM) வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி தனது புகாரில், ’கவுன்சிலிங் கொடுக்கும் போர்வையில் ஆண்கள் விடுதிக்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்குச் சென்றதும், தனக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் தாம் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியபோது, தான் விடுதிக்குள் இருப்பதையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்ததாகவும், வெளியே சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டிய’தாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவியின் தந்தை, ”அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும், தனது மகள் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வெள்ளிக்கிழமை இரவு 9:34 மணிக்கு தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் தனது மகள் ஆட்டோவில் இருந்து விழுந்து சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தனர். அவர் SSKM மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் அவளை மீட்டு அங்கு அழைத்துச் சென்றதாகவும் தனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று தனது மகள் தன்னிடம் கூறினார். அவள் இயல்பாக இருக்கிறாள். கைது செய்யப்பட்ட நபருக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவளிடம் நான் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் எழுந்த பிறகு நான் அவளிடம் மீண்டும் பேசுவேன்” என்றவரிடம், ”உங்கள் மகள் அதிர்ச்சியில் இருக்கிறாரா” என்று கேட்டனர். ஆனால் அவர், "இல்லை, அவள் முற்றிலும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள்" எனப் பதிலளித்தார்.