'ரயிலில் 300 பேர் செல்லலாம்; பைக்கில் 3 பேர் செல்லக்கூடாதா?' வடிவேலு பாணியில் பேசிய தலைவர்

'ரயிலில் 300 பேர் செல்லலாம்; பைக்கில் 3 பேர் செல்லக்கூடாதா?' வடிவேலு பாணியில் பேசிய தலைவர்
'ரயிலில் 300 பேர் செல்லலாம்; பைக்கில் 3 பேர் செல்லக்கூடாதா?' வடிவேலு பாணியில் பேசிய தலைவர்

"ரயிலில் 300 பேர் பயணிக்க எந்த அபராதமும் இல்லாதபோது, ஒரு பைக்கில் 3 பேர் சென்றால் மட்டும் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம்?" என சமாஜ்வாதி கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கிவிட்டதால் அங்கு அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் பரப்புரைகளில் மக்களை கவர்வதற்காக பல தலைவர்கள் கவர்ச்சிகமான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இதில் சில தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், சமாஜ்வாதி கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவர், "ரயிலில் 70 இருக்கைகள்தான் இருக்கின்றன. அதில் 300 பேர் பயணம் செய்கிறார்கள். அதற்கு எந்த அபராதமும் இல்லை. ஆனால், ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றால் மட்டும் நம் நாட்டில் அபராதம் விதிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் தாராளமாக செல்லலாம். அவ்வாறு எங்களால் செய்ய முடியவில்லை என்றால், பேருந்துகளுக்கும், ரயில்களுக்கும் நாங்கள் அபராதம் விதிப்போம்" எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சுவாரஸ்யமான விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, ஒரு திரைப்படத்தில் அமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் வடிவேலுவிடம், "டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு முறையாக நிதி வராததற்கு என்ன காரணம்" என நிருபர்கள் கேள்வியெழுப்புவார்கள். அதற்கு வடிவேலு, இந்திய வரைப்படத்தை மேஜையில் வைத்து, "இங்க இருக்குற தமிழ்நாட்ட அலேக்கா தூக்கி டெல்லிக்கு பக்கத்துல வச்சிட்டா எல்லாம் சரியாயிரும்" எனக் கூறுவார். இந்த நகைச்சுவை காட்சியை போலவே, ஒரு சிறு புரிதல் கூட இல்லாமல் உத்தரப் பிரதேச அரசியல் தலைவரும் பேசி இருப்பதாக நெட்டீசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com