“ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்” - சசிதரூர்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் ராகுல்காந்திதான் பிரதமர் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்தது.
ஸ்டாலினின் கருத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தலுக்கு பின் தான் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் எனவும் ஒருதலை பட்சமான தேர்வு தவறான எண்ண ஓட்டத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்தது ஒரு தனிப்பட்ட கட்சியின் விருப்பம் எனவும் கூட்டணிக் கட்சிகளின் விருப்பமில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறுகையில், “பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ராகுல் காந்தி. அவர் ஒரு மிகச்சிறந்த பிரதமராக இருப்பார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் ராகுலைதான் பிரதமராக தேர்ந்தெடுப்போம்.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி, கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர் யார் என முடிவெடுக்கப்படும். இதுகுறித்த பிரச்னை 2019 தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் காங்கிரஸ் மட்டுமே தேசிய அளவில் மாற்று அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. எந்த ஒரு தேசிய கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சி இயற்கையான ஆதார சக்தியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.