கொரோனா இறப்புகளுகளுக்கு இழப்பீடு வழங்கினால் மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்?- ஒரு பார்வை

கொரோனா இறப்புகளுகளுக்கு இழப்பீடு வழங்கினால் மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்?- ஒரு பார்வை
கொரோனா இறப்புகளுகளுக்கு இழப்பீடு வழங்கினால் மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும்?- ஒரு பார்வை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பது மத்திய அரசின் கடமை என்றும், அதனை செய்ய ஆறு வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவேளை இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வருமானால், அதற்கு எவ்வளவு தோராயமாக செலவாகும் உள்ளிட்ட விவரங்களை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், "எவ்வளவு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை நாங்கள் வரையறுத்துக் கூற போவதில்லை. அதை செய்ய வேண்டியது மத்திய அரசு உடைய கடமை. எனவே, குறைந்தபட்ச இழப்பீடு தொகையையாவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்" எனக் கூறிய நீதிபதிகள், இதனை 6 வாரங்களில் மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நிதிப் பிரச்சனையில் இருப்பதாகவும், இத்தகைய இழப்பீடு தொகை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதை விட அந்த தொகையினை மருத்துவ கட்டமைப்புகளை தரம் உயர்த்த பயன்படுத்தினால் உயிரிழப்புகளை ஏற்படாமல் தடுக்க முடியும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது.

அதாவது, இழப்பீடு தொகையை கொடுக்க முடியாது என்பதைத்தான் மறைமுகமாக கூறியிருந்தது. ஆனால், தற்பொழுது உச்சநீதிமன்றமே அதனை வழங்க அறிவுறுத்தல் கொடுத்து விட்ட நிலையில், மத்திய அரசு கட்டாயம் ஒரு குறைந்தபட்ச தொகையையாவது கொடுத்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,98,454 பேர். இதில் ஒருவரது குடும்பத்திற்கு தலா 1 லட்ச ரூபாய் குறைந்தபட்ச நிதி வழங்குகிறது என்றாலும் கூட, மத்திய அரசுக்கு சற்றேறக்குறைய ரூ.4000 கோடி செலவாகும். இதுவே மனுதாரர்கள் கூறியது போல 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு முன் வருகிறது என்றால், ஏறக்குறைய ரூ.16,000 கோடி ரூபாய் செலவாகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மொத்த தொகையையும் மத்திய அரசு மட்டுமே கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பங்களிப்புடன் இதனை மேற்கொள்ளும் பட்சத்தில் வழங்கப்பட வேண்டிய மொத்த தொகையில் சரிபாதியையோ அல்லது நிர்ணயிக்கக்கூடிய அளவைப் பொருத்தோ மத்திய அரசு கொடுத்தால் போதும். இதனால் அதனுடைய செலவு என்பதும் பெருமளவில் குறையும்.

2021-22-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகை என்பது ரூ.71,268 கோடி. 2025-ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு என்பதை ரூ.2.23 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டுமென ஏற்கெனவே மத்திய அரசு திட்டமிட்டு இருக்கக்கூடிய நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தொகை என்பது மிகவும் குறைவானதே.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகள் பலன் அடையும் வகையில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை வழங்க 67,266 கோடி ரூபாயை மத்திய அரசு ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டும் இதே திட்டத்திற்காக 68,820 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தது. எனவே இந்தத் திட்டத்துடன் ஒப்பிடும்பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்கக் கூடிய திட்டம் என்பது சாத்தியமானதே.

ஏற்கெனவே டெல்லி அரசாங்கம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு தொகையை வழங்கி வருகிறது. பீகார் அரசாங்கம் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயை மத்தியப் பிரதேச அரசு வழங்கி வருகிறது.

இவை தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கக்கூடிய மருத்துவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் 10 லட்சத்திலிருந்து 50 லட்ச ரூபாய் வரை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இவை தவிர கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முழுமையான கல்வி சேவை மற்றும் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பு நிதி போன்றவற்றை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது போல பல்வேறு மாநிலங்களும் அதனைச் செய்து வருகிறது.

இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டிதான் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இழப்பீடு வழங்க அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. எனவே கட்டாயம் இதற்கான விரிவான திட்டத்தின உருவாக்க வேண்டிய நிலை தற்பொழுது மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு உருவாக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தான் எவ்வளவு தொகையை இழப்பீடாக வழங்க மத்திய அரசு முன் வருகிறது; அதை எந்த மாதிரியாக வழங்கப்போகிறது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com