"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் 3 வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக புரிந்துகொண்டால், ஒட்டுமொத்த நாடே பற்றி எரியும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக குடியரசுத் தினத்தன்று டெல்லியை நோக்கி போலீசார் அனுதித்த வழிகளில் டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனல், குறிப்பிட சில விவசாய சங்கத்தினர் செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும் டெல்லியில் இன்னும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் 3 வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக புரிந்துகொண்டால், ஒட்டுமொத்த நாடே பற்றி எரியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் பேசிய ராகுல்காந்தி, “ உண்மையை சொல்லப்போனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இன்னும் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லை. ஒருவேளை அனைத்து விவசாயிகளும் மூன்று வேளாண் சட்டம் குறித்த உண்மையை தெளிவாக புரிந்துகொண்டால் நாடு ழுமுவதும் போராட்டம் வெடிக்கும். நாடே பற்றி எரியும்” எனத் தெரிவித்தார். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக டெல்லியில் குடியரசுத் தினத்தன்று ஏற்பட்ட வன்முறை நிலவரம் தொடர்பாக அன்றைய தினமே பேசிய ராகுல்காந்தி, “ வன்முறை எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாக அமையாது. நாட்டின் நலன் கருதி மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.