அபாயக் கட்டத்தை எட்டியது இடுக்கி அணை நீர்மட்டம் ! பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்
கேரள மாநிலம் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வரும் நிலையில், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் முன்னறிவிப்போடுதான் அணை திறக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
ஆசியாவிலேயே ஆர்ச் வடிவிலான பெரிய அணை என்ற பெருமை கொண்ட இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரமுள்ள இடுக்கி அணையில், தற்போது நீர்மட்டம் 2 ஆயிரத்து 395 அடியை தாண்டி அதிகரித்து வருகிறது. எனவே அணை 2 ஆயிரத்து 399 அடியை தொடுவதற்குள் மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என அணையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அணை பகலில்தான் திறக்கப்படும் என்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.