26 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை: கண்களை கவரும் வீடியோ

26 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை: கண்களை கவரும் வீடியோ

26 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை: கண்களை கவரும் வீடியோ
Published on

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள கேரளத்தில், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழையால், வயநாடு மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தாமரசேரி, நாடுகாணி, ஏரியா, குத்தியாடி, பால்சுரம் ஆகிய ஐந்து மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயநாடு மாவட்டம் மற்ற மாவட்டங்களில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

இங்கு வைத்திரி பகுதியில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. வைத்திரி காவல்நிலையத்தின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வைத்திரி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதில் லில்லி என்ற பெண் உயிரிழந்தார். மலப்புரம் மாவட்டத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கனமழை காரணமாக சாளியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 10 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். கன்னூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மொத்தத்தில் கனமழை, மண்சரிவுகளில் சிக்கி 20க்கும் அதிக‌மானோர் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கோழிக்கோடு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மழை பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்காக ராணுவத்தின் உதவியை கோரியுள்ளார் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன்.

இதற்கிடையே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக இடமலையார் அணையின் முழுக் கொள்ளளவான 169 மீட்டருக்கும் அதிகமாக நிரம்பியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, 2 ஆயிரத்து 403 அடி உயரமுள்ள இடுக்கி அணையில் 2 ஆயிரத்து 398 அடி வரை நிரம்பியுள்ளது. இதையடுத்து 26 ஆண்டுகளுக்குப்பிறகு இடுக்கி அணை திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் செறுதோணி அணையில் இருந்து விநாடிக்கு 5 ‌ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து செறுதோணி முதல் எர்ணாகுளம் வரை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் திறக்கப்பட்டதாலும், தொடர் கனமழை காரணமாகவும் கொச்சி விமான நிலையத்தில் விமான வருகைகளை அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை-கொச்சி விமாச சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com