ஐடிபிஐ வங்கி சர்ச்சை: விற்கும் மத்திய அரசு.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. பின்னணி என்ன?
ஐடிபிஐ வங்கியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி மற்றும் ஊழியர் சங்கங்கள், இந்த விற்பனை முறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன. சுதந்திர இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள், மின்சாரத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகாலக் கடன் வழங்கும் நோக்கில் மத்திய அரசால்1964இல் தொடங்கப்பட்டதுதான் ஐடிபிஐ. கிங்ஃபிஷர், ஏபிஜி ஷிப்யார்ட், வீடியோகான் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராததால், வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது.
2018–2019ஆம் ஆண்டில், எல்ஐசி மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து வங்கியைக் காப்பாற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்தன. அதன்பின் வங்கியின் நிலைமை சீரடைந்து, கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பியது. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த 'ஃபேர்ஃபேக்ஸ்' முதலீட்டு நிறுவனத்திற்கு, ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை 52,878 கோடி ரூபாய்க்கு விற்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது.
ஆனால், லாபத்தில் இயங்கும் ஒரு அரசு சார்ந்த வங்கியை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பதில்பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் ஊழியர் சங்கங்களும் குற்றம்சாட்டுகின்றன. தற்போதைய சர்ச்சைக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. அரசு தொடக்கத்தில் ஒரு பங்கின் குறைந்தபட்ச விலையாக 94 ரூபாய் 42பைசா எனக் கணித்தது. ஆனால் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் 81 ரூபாய் தருவதாகக் கூறியதும், அரசு அவசரஅவசரமாக வங்கியின் அடிப்படை மதிப்பை 75 ரூபாய் 99 பைசாவாகக் குறைத்தாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், பங்குகளை விற்க நிதி விதிகளில் தெளிவான வழியில்லாததால், ரயில்வே கழிவுப் பொருட்களை ஏலம் விடும்விதிகளைப் பயன்படுத்தியதாகவும், வங்கியின் மதிப்பை செயற்கையாகக் குறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் பணத்தில் காப்பாற்றப்பட்ட வங்கியை ஏன் தனியாருக்கு விற்கவேண்டும்? ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகள் என்னவாகும் என ராகுல் காந்தியும் வங்கி சங்கங்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளையில், அனைத்து விதிகளும் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கணித்த விலையைவிட அதிக தொகை கிடைப்பதால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

