இரண்டு அலைகளிலுமே பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் 40 வயதைத் தாண்டியவர்கள் - ஐசிஎம்ஆர்
கொரோனா முதல் அலை மற்றும் 2ஆம் அலையில் பாதிக்கப்பட்டோரில் 70 சதவீதம் பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என ஐசிஆர்எம் -இன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்ட 1.5 கோடி பேர்களில் இதுதான் அதிக எண்ணிக்கை என கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,619 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி ஐசிஆர்எம்மின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ’’நாங்கள் பயன்படுத்தும் ஆர்டி-பிசிஆர் சோதனை மிகமிக துல்லியமானதாகும். இதில் இரண்டு மரபணுக்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதால், உருமாற்றமடைந்த எந்தவகையும் கண்டறியப்படமால் போக வாய்ப்பில்லை. இந்தியாவில் இருமுறை உருமாற்றமடைந்த வைரஸ்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். ஆனால் அதன் பரவும் தன்மை அந்த அளவு இல்லை.
பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க வகை உருமாற்றமடைந்த கொரோனாக்கள் வேகமாக பரவும் தன்மை கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனாவைரஸின் மாறுபட்ட தன்மை மற்றும் செயல்பாடு, அடையாளம் காணமுடியாத உருமாற்றம் போன்றவற்றிற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கொரோனா முதல் அலை மற்றும் 2ஆம் அலையில் பாதிக்கப்பட்டோரில் 70 சதவீதம் பேர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.