“பின்வாங்க அல்ல; முன்னேற...” 370-வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஷா ஃபைசல் IAS!

370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது சார்பில் தொடரப்பட்ட மனுவை வாபஸ் பெற்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் தெரிவித்துள்ளார்.
Shah Faesal
Shah FaesalFile Image

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷா ஃபைசல் கடந்த 2010-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். இந்நிலையில் இவர் கடந்த 2019-இல் காஷ்மீர் மக்களின் நலன் கருதி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறி தமது ஐ.ஏ.எஸ். பணியைத் துறப்பதாக அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை துவக்கிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதனிடையே ஷா ஃபைசலின் ராஜினாமாவை மத்திய அரசு நிராகரித்ததால் அவர் மீண்டும் ஐ.ஏ.எஸ். பணிக்கு திரும்பினார்.

Shah Faesal
Shah Faesal

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறு மனுத்தாக்கல் செய்தவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா ஃபைசலும் ஒருவர் ஆவார். 370-வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இச்சூழலில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது சார்பில் தொடரப்பட்ட மனுவை முன்பே வாபஸ் பெற்று விட்டதாக ஷா ஃபைசல் தெரிவித்துள்ளார்.

supreme court
supreme courtpt desk

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல், ''என்னைப் போன்ற பல காஷ்மீரிகளுக்கு 370-வது சட்டப்பிரிவு என்பதெல்லாம் கடந்த கால விஷயம். ஜீலம் மற்றும் கங்கை இந்தியப் பெருங்கடலில் இணைந்துள்ளது. எனது இந்த முடிவு, பின்வாங்குவதற்காக அல்ல; முன்னேறுவதற்காக'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com