இந்திய விமானப் படையிடமிருந்தது பிரியா விடை பெற்ற மிக் 27 !

இந்திய விமானப் படையிடமிருந்தது பிரியா விடை பெற்ற மிக் 27 !
இந்திய விமானப் படையிடமிருந்தது பிரியா விடை பெற்ற மிக் 27 !


இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கிய மிக் 27 போர் விமானங்கள் இன்றுடன் ஓய்வு பெற்றன. ராணுவ மரியாதையுடன் மிக் 27 விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டது.

மிக் 27 ரக போர் விமானம் சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு இந்த வகை விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் உலகில் பயன்பாட்டிலிருந்த போர் விமானங்களிலேயே இதுதான் மிகச்சிறந்த போர் விமானமாகும். கார்கில் போரின் போது எதிரிகளுக்கு இது சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. 1999ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படைகள் ஊடுருவி ஆக்கிரமித்தன. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போரில் பாகிஸ்தான் படைகளை விரட்டியதில் முக்கிய பங்காற்றியவை மிக் 27 ரக விமானங்கள்.

இந்த விமானங்களை பகதூர் என்றே நமது விமானப்படை வீரர்கள் அன்போடு அழைக்கின்றனர். வானில் இருந்து நிலத்தை நோக்கி தாக்குவதில் வல்லமைப் படைத்தவை மிக் 27 போர் விமானங்கள். இந்த விமானங்களை தயாரிப்பதற்கான உரிமம் பெற்ற பிறகு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் 167, மிக் 27 விமானங்களை தயாரித்தது.

மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இவ்விமானம், 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் நமது வான் எல்லைக்கு பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கடைசி ஸ்குவாட்ரானில் இருந்த 7 விமானங்களும் ஓய்வு பெற்றன.

ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் இருந்த 7, மிக் 27 போர் விமானங்களும் கடைசியாக பறந்து நமது வான்வெளியை அலங்கரித்தன. இறுதியாக வானில் வட்டமிட்டு தரையிறங்கிய போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனை அடுத்து ராணுவ ‌மரியாதை அதற்கு அளிக்கப்பட்டது. இனி இந்த விமானங்களை நாம் எப்போதுமே வானில் காண முடியாது. ஏனெனில் எந்த நாட்டிலும் மிக் 27 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் இல்லை. நமது வான் எல்லையை பாதுகாத்து வந்த மிக் 27 போர் விமானங்கள் இனி காட்சி பொருளாகவே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com