“மகனையும் ராணுவத்திற்கே அனுப்புவேன்” - புல்வாமாவில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பம்

“மகனையும் ராணுவத்திற்கே அனுப்புவேன்” - புல்வாமாவில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பம்

“மகனையும் ராணுவத்திற்கே அனுப்புவேன்” - புல்வாமாவில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பம்
Published on


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களில் ஒருவரான சிவச்சந்திரனின் மனைவி, தனது ஒரே மகனையும் ராணுவத்திலேயே சேர்க்கப்போவதாக கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு- காஷ்மீருக்கு 2,547 வீரர்கள் 78 வாகனங்களில் சென்றனர். அப்போது சொகுசு காரில் வந்த பயங்கரவாத அமைப்பினர் அந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலின் நினைவு தினம் இன்று நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இது சம்பந்தமாக தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் குடும்பத்தினர் புதிய தலைமுறைக்குப் பேட்டி அளித்தனர்.

அதில் சிவச்சந்திரனின் தாயார் சிங்காரவள்ளி பேசியபோது “எனது மகன் விடுமுறைக்கு வரும்போது வீட்டிலேயே இருப்பான். அவன் வீட்டில் இருப்பதே எனக்குப் பெரிய நிம்மதியாக இருக்கும். எனது இரு மகன்களையும் நாட்டிற்காக கொடுத்து விட்டேன். அதனால் இப்போது எனக்கு கொள்ளிவைக்க கூட ஆள் இல்லை. இருப்பினும் எனது பேரனை நன்றாகப் படிக்க வைத்து நாட்டிற்கு சேவை செய்யவே அனுப்புவேன்” என்றார்.


சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி பேசியபோது “எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகன் அப்பா எங்கே எனக் கேட்கும் போது நான் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று சொல்வேன். ஆனால் அவனோ எனது கணவரின் கல்லறையைப் பார்க்கும் போது எல்லாம் அப்பா இங்கேதான் இருக்கிறார் என்று கூறுவான். எனது கணவருக்கு அவனை ஐ.பி.எஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆகவே அவனை ஐ.பி.எஸ் படிக்க வைத்து ராணுவத்திற்குப் பணிபுரிய அனுப்புவேன்” என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com