“தேசப்பற்று பாஜகவுக்கு மட்டும் சொந்தமில்லை” - பவன் கல்யாண்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் போர் வரும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாஜக கூறியது என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்தியா அழித்தது.
இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாகவும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக இது வழிவகுக்கும் எனவும் எடியூரப்பா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தான் அவ்வாறு கூறவில்லை. என் வார்த்தைகள் திரிக்கப்பட்டு விட்டது என எடியூரப்பா தெரிவித்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநில முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக போர் இருக்கும் என பாஜக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே என்னிடம் கூறியிருந்தது. இப்போது நம்முடைய நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையை வைத்தே நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். எந்தப் பிரச்சனைக்கும் போர் தீர்வு ஆகாது. பா.ஜ.கவுக்கு மட்டுமே தேசப்பற்று உரிமை கிடையாது. பாஜகவினரை விட 10 மடங்கு நாங்கள் தேசப்பற்றாளர்கள்.
இஸ்லாமியர்கள் தங்களுடைய தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் இஸ்லாமியர்களும் சமமான உரிமையை பெற்றுள்ளனர். இந்தியா இஸ்லாமியர்களை இதயத்தில் வைத்துள்ளது. அசாரூதீன் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்துல்கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்” எனப் பேசினார்.