மறக்கவே முடியாத நிமிடங்களை விவரிக்கிறார் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணி..!
கேரள வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. புரண்டோடிய வெள்ளத்தால் பல பாலங்கள் தரைமட்டமாகின. வீடுகள் அப்படியே இடிந்து விழுந்த காட்சிகளையெல்லாம் நாம் வீடியோவாக பார்த்திருப்போம். அதில் ஒன்றுதான், கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டர் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்ட காட்சி. வீடியோவை பார்க்கும் நமக்கே சற்று பயம் வந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் தனக்கு எந்தவித பயமோ, பதட்டமோ இல்லை என்கிறார் சஜீதா ஜபில். நலமுடன் குழந்தை பெற்று தற்போது வீடு திரும்பிய நிலையில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை அவரே விவரிக்கிறார்.
“நாங்கள் இருந்த ஆலுவா பகுதியில் வெள்ளம் வரத் தொடங்கியதால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டோம். கடந்த 15-ஆம் தேதி மாலை வரை எங்களுக்கு அவ்வளவு பிரச்னை இல்லை. ஆனால் தண்ணீர் வர ஆரம்பித்தும் ஒரு மணி நேரத்தில் நிலைமை மோசமானது. உடனே நாங்கள் அனைவரும் மொட்டை மாடிக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முதலில் முதல் தளம் வரை வந்த வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக இரண்டாவது மாடி வரை வந்துவிட்டது.
அன்றைய இரவே எனது பனிக்குடம் உடைந்துவிட்டது. என்னை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பயத்துடன் இருந்தனர். ஜாதி, மதம், வயது வித்தியாசமன்றி அனைவரும் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தனர். செவிலியர் ஒருவர் மருத்துவருக்கு தொடர்பு கொண்டு அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தார். எங்கள் பகுதியின் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் நெடுநேரமாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் கடற்படையில் பணிபுரியும் என் சொந்தக்காரர் ஒருவருக்கு தொடர்பு கொண்டோம். அவர் மூலம் ஹெலிகாப்டர் வசதி கிடைத்தது. நாங்கள் ஒரு மசூதியின் மொட்டை மாடியில் தான் இருந்தோம். எனவே ஹெலிகாப்டரில் ஏறுவது என்பது சவாலானது. ஹெலிகாப்டரை கீழே இறக்கும் நிலையிலும் இல்லை. எனவே தான் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பயப்பட்டனர். ஆனால் எனக்கோ எந்தவித பயமும் இல்லை. எப்போது குழந்தையை நலமுடன் பெற்றெடுப்போம் என குழந்தை தொடர்பாகவே என் மனம் இருந்தது. அதன்பின் மதியம் 2.15 மணிக்கு சஞ்சிவானி மருத்துவமனையில் எங்களுக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு முகமது சுபான் என பெயரிட்டுள்ளோம். எனக்கு யாரென்று தெரியாத பலரும் எங்களுக்கு உதவி புரிந்தனர். மருத்துவமனையிலும் அவர்கள் எங்களை சந்தித்து சென்றனர்.” என்றார்.
சஜீதா ஜபில் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது பல சிக்கல்களுக்கு மத்தியில் பிறந்த மூன்றாவது குழந்தையும் நலமுடன் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Courtesy: TheNewsMinute