"சொந்தக் கட்சியினரால் விமர்சனத்திற்கு உள்ளானேன்!" - 'ஜி23' தலைவர்களும் ராகுல் காந்தியும்!

"சொந்தக் கட்சியினரால் விமர்சனத்திற்கு உள்ளானேன்!" - 'ஜி23' தலைவர்களும் ராகுல் காந்தியும்!
"சொந்தக் கட்சியினரால் விமர்சனத்திற்கு உள்ளானேன்!" - 'ஜி23' தலைவர்களும் ராகுல் காந்தியும்!

மூத்த தலைவர்களை உள்ளடக்கிய ‘ஜி -23’ போன்ற ஒரு கருத்து வேறுபாடு குழு காங்கிரஸைத் தவிர, வேறு எந்த கட்சியிலும் இருக்க முடியாது எனவும், இது காங்கிரஸ் கட்சியின் இயல்பு எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்காவின் பிரபல பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ராகுல்காந்தி உரையாடினார். அப்போது அவர், காங்கிரஸில் இருப்பது போன்ற கருத்து வேறுபாடு கொண்ட ஜி-23 குழு பாஜக அல்லது பகுஜன் சமாஜ் கட்சி அல்லது திரிணாமுல் காங்கிரசில் உள்ளிட்ட எந்த கட்சியிலும் இருக்க முடியாது என்றார். இந்த ஜி-23 குழு குறித்து ராகுல்காந்தி கடந்த 2 வாரங்களில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.

``உதாரணத்திற்கு, ஒரு 20 பேர் இருக்கிறார்கள். அதுவும் காங்கிரஸ் குறித்து வேறுபட்ட பார்வையைக் கொண்ட 20 பேர் உள்ளடக்கிய குழு ஒன்று, பாஜக, பகுஜன் சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருக்க முடியும் என நினைக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், ``இத்தகைய வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட பல்வேறு தரப்பட்டவர்களை வேறு எந்த கட்சியும் அனுமதிக்காது. அப்படிப்பட்ட எதிர்கருத்து உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் காங்கிரஸ் தொடர்ந்து உரையாடி வருகிறது” என்றார்.

குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்களை உள்ளடக்கிய ஜி -23 எதிர்ப்பாளர்கள் குழு பிப்ரவரி 27 அன்று ஜம்முவில் சந்தித்து அதன் பலத்தை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வு மற்றும் குழு குறித்து காங்கிரஸின் தலைமை பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ள ‘நட்சத்திர பேச்சாளர்கள்’ பட்டியலில் மேற்கண்ட குழுவைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை.

பட்டியலில் ஜி-23 தலைவர்களை சேர்க்காததன் மூலம் காங்கிரஸ் அவர்கள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸிலில் புதிய தலைமையை கொண்டுவர காந்தி குடும்பம் ஒதுங்கியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல், `` 1989ம் ஆண்டு முதல் தனது குடும்பத்தைச் சேரந்த யாரும் நாட்டின் பிரதமராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

“காங்கிரஸ் கட்சியில் எனக்கு ஒரு பங்கு உண்டு. காங்கிரஸ் கட்சியில் ஒரு குறிப்பிட்ட கருத்தியல் மின்னோட்டத்தை நான் பாதுகாக்கிறேன், அதில் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உரையாடலில், ராகுல்காந்தி 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசினார். ஜனநாயக நிறுவனங்களின் இழப்பு மற்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் விவாதித்தார்.

மேலும் ஆர்எஸ்எஸ் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ஜி -23 எதிர்ப்பாளர்களை மறைமுகமாகக் குறிப்பிடும் விதமாக, இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் ஒன்றிய தேர்தலை நடத்த வலியுறுத்தபட்டபோது, தனது சொந்தக் கட்சியால் விமர்சிக்கப்பட்டதாகக் கூறினார் ராகுல்காந்தி.

"இளைஞர் அமைப்பு மற்றும் மாணவர் அமைப்பு தேர்தல்களை நடத்த வலியுறுத்தியபோது, அதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவன் நான். அப்போது நான் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டேன். எனது சொந்தக் கட்சி நிர்வாகிகளால் விமர்சனத்திற்கு உள்ளானேன். கட்சிக்குள்ளேயே ஜனநாயகத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது என்று கூறும் முதல் நபர் நான், ஆனால் இந்த கேள்வி வேறு எந்த அரசியல் கட்சியையும் பற்றி கேட்கப்படவில்லை என்பது சுவாரஸ்யமானது, ”என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com