“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்

“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்
“பாஜக தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன்” - முதல்வர் ரமன் சிங்

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

2000ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் அமைந்ததில் இருந்து தற்போது வரை 4 பேரவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் பாஜக வெற்றி பெற்று ராமன் சிங் முதல்வராக இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சத்தீஸ்கரில் ரமன் சிங்கின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி தற்போது பெற்றுள்ள வெற்றி அம்மாநில தேர்தல்களில் ஒரு கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும். 

2003, 2008, 2013ம் ஆண்டு தேர்தல்களில் பாஜக வென்ற போது முறையே 50, 50, 49 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி 44% வாக்குகளுடன் சுமார் 60 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இது ஆளும் கட்சிக்கு எதிராக முன் எப்போதையும் விட கடுமையான எதிர்ப்பு மனப்பான்மை நிலவியதையே காட்டுகிறது.

அதே சமயம் அஜித் ஜோகியின் ஜ‌னதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எனக் கூறப்பட்டது.  ஆனால் அந்தக் கருத்துகளையும் முறியடித்து காங்கிரஸ் மெகா வெற்றிபெற்றுள்ளது. 

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களமிறங்கி இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

ராஜினாமாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சத்தீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முழுபொறுப்பேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன். வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com