‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறேன்’- குணமடைந்த இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி பேட்டி
கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட இந்தியாவின் முதல் நோயாளி ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவத் தொழில் மீது தனக்கு மரியாதை வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 24 வயதான இந்த மாணவி தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். அதன்பின் அவர் தனது படிப்பை முடித்த பிறகு மக்களுக்காக தனது சேவையைத் திரும்பி அளிக்க இருப்பதாக நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். மேலும் தான் உயிர்பிழைப்பதற்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தனது மருத்துவப் படிப்பைப் பார்த்துவந்த இவர், வுஹானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவிடவில்லை. மேலும் உயிர்பிழைத்து விடுவோம் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கொடிய நோய்க்கு எதிரான போரில் அவர் போரிட்டு வெற்றி பெற்றதுள்ளது அவரை மேலும் உறுதியாக்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய அந்த மருத்துவ மாணவி, “எனக்குள் இப்போது நேர்மறை எண்ணம் மட்டுமே உள்ளது. என் உயிரைக் காப்பாற்ற மக்கள் உழைப்பதை நான் கண்டிருக்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நான் தனியாக இருப்பதாக நான் ஒருபோதும் உணரவில்லை. பலர் எனக்காக பிரார்த்தனை செய்தனர். மருத்துவத் தொழில் மீதுள்ள என் மரியாதையும் ஆர்வமும் இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது”என்று அவர் கூறினார். கடந்த ஒரு மாத காலமாக நடந்த ஒட்டுமொத்த சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், சீனாவிலிருந்து தப்பி வந்தது தனது அதிர்ஷ்டம் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது. 75, 400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.