நான் தினமும்தான் என் தாயாரைச் சந்திக்கிறேன்: கெஜ்ரிவால்
பிரதமர் மோடி தனது தாயாருடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டதாக வந்த செய்தி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தான் தனது தாயாருடன் வசிப்பதாகவும் அவரை தினந்தோறும் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இன்று காலையில் தனது தாயாருடன் சிற்றுண்டி சாப்பிட்டதாகவும், அதனால் யோகா பயிற்சியை இன்று செய்யவில்லை என்றும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், இந்து மத நூல்கள் ஒருவர் தனது தாயாருடனும் மனைவியுடனும் வசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மோடியின் வீடு பெரியதுதான் என்று குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், ஆனால் அவரது மனதை விசாலமாகக் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மோடி தனது அரசியல் லாபத்திற்காக தனது தாயாரைப் பயன்படுத்துகிறார் என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது தாயாருடன்தான் தாம் வசித்து வருவதாகவும் தினமும் அவரிடம் தான் ஆசிர்வாதம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், மோடியைப் போல வங்கி வாசலில் வரிசையில் தனது தாயாரை நிறுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.