“ நானே என் அருமை மகளை கொன்றுவிட்டேனே”- பரிதவிக்கும் தந்தை..!

“ நானே என் அருமை மகளை கொன்றுவிட்டேனே”- பரிதவிக்கும் தந்தை..!
“ நானே என் அருமை மகளை கொன்றுவிட்டேனே”- பரிதவிக்கும் தந்தை..!

என் கையால் பிரசாதத்தை கொடுத்து நானே என் அருமை மகளை கொன்றுவிட்டேன் என தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 14 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தையே தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதியன்று சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உண்ட பலரும் வயிற்றை பிடித்தவாறு மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தொடர்ச்சியாக ஒவ்வொருவராக உயிரிழந்தனர். தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களில் ஒருவர்தான் அனிதா. 12 வயதுடைய அனிதாவின் தாயார் சாந்தா. இதுகுறித்து அவர் கூறும்போது, “ கோயிலின் கோபுர திறப்பு விழாவையொட்டி அதனை காண என் ஆசை மகள் விரும்பினாள். இதற்காக என் கணவருடன் சண்டைபோட்டு புத்தாடையும் வாங்கிக் கொண்டாள். பின்னர் மகிழ்ச்சிகரமாக அருகிலுள்ள கோயிலுக்கு ஓடோடிவிட்டாள். கோயிலின் ஏற்பாடு பணிகளை கவனிக்க என் கணவர் புட்டசாமியும் அங்கு சென்றிருந்தார். அப்படியிருக்கத்தான் 14-ஆம் தேதி மதியம் 1 மணியளவில் கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதாக செய்தி பரவியது. உடனே கோயிலுக்கு ஓடோடி சென்று பார்த்தேன். அங்கே என் மகளை தூக்கி வைத்துக் கொண்டு கதறியடி என் கணவர் இருந்தார். என் மகள் சுயநினைவின்றி காணப்பட்டாள். பக்கத்தில் பலரும் அவரின் குடும்ப உறவுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் என் கணவரும் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனிதா உயிரிழந்த நிலையில் சாந்தாவின் கணவரான புட்டசாமியின் உடல்நிலையில் முன்றேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். சம்பவம் குறித்து புட்டசாமி கூறும்போது, “ நான் தான் என் மகளுக்கு பிரசாத்தை ஊட்டினேன். இப்போது என் கையால் சாப்பிட்ட உணவாலே என் மகள் இறந்துவிட்டாளே.. நானே என் மகளை கொலை செய்துவிட்டேனே. அவளுக்கு கொடுக்கும் முன்பு நான் தானே சாப்பிட்டிருக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவிக்கிறார் புட்டசாமி.

91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் மீண்டு வரை இறைவனை தொடர்ச்சியாக வேண்டி வருகின்றனர் அவர்களது குடும்பத்தினர். இதனிடையே பிரசாதத்தில் விஷம் இருந்தது தொடர்பாக 7 பேர் மீது ராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரசாத்தை சமைத்த சமையல்காரர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிரவும் இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் களமிறங்கியள்ளனர். அதேமசயம் கோயில் நிர்வாகம் மீது அதிருப்தி கொண்ட சிலரே இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Courtesy: The News Minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com