பாதிரியார்களின் வன்கொடுமை விவகாரம்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பெண்ணின் கணவர்..!
கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கவந்த பெண்ணை பாதிரியார்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், தன்னிடம் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அது அவரை மிகவும் காயப்படுத்த, தனது மத வழக்கப்படி ஆலய பாதிரியாரிடம் சென்று விஷயத்தை கூறி பாவ மன்னிப்பு கோரியுள்ளார். கிறிஸ்துவ மத வழக்கப்படி பாவ மன்னிப்பு சடங்கு சமயத்தில் மக்கள் கூறுவதை பாதிரியார்கள் எக்காரணம் கொண்டும் வெளியே கூறக் கூடாது. ஆனால் அந்தப் பாதிரியாரோ சம்பந்தப்பட்ட பெண்ணை இந்த விவகாரத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இன்னும் 4 பாதிரியார்களிடம் கூறி அவர்களை கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரிய வர, பாதிரியார்ளை நீண்ட கால விடுப்பில் செல்லுமாறு சர்ச் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் தனது மனைவி பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக அப்பெண்ணின் கணவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ அந்த பாதிரியார்கள் இன்னும் தேவாலயத்தில் தங்களது வழிபாட்டை தொடர்கின்றனர். நீண்ட நாள் விடுப்பில் செல்லுமாறு தேவாலயம் சார்பில் கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அதனை முறையாக பின்பற்றவில்லை. அவர்கள் பாதிரியாராக தொடர்வதற்கு தகுதி கிடையாது. அதிகப்பட்ச தண்டனை அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதுவே என் கருத்து. என் மனைவி பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆதாரம் இருக்கிறதா என சிலர் என்னிடம் கேட்கின்றனர். என் மனைவியின் கூற்றே என் ஆதாரம்.
வெளியானது எப்படி..?
கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி குமார் தனது மனைவியின் இமெயிலில் வங்கி சிலிப் ஒன்றை கண்டுள்ளார். அதில் கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு குமாரின் மனைவி ரூபாய் 9,000 செலுத்துவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னர் குமார் தனது மனைவியின் மொபைல் போனை சோதனை செய்துள்ளார். அப்போது சில பாதிரியார்களை அவர் சந்தித்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து குமார் தனது மனைவியிடம் கேட்டு சண்டையில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின்னரே தனக்கு சிறு வயதில் பாதிரியாரால் ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எப்படி தொடர்ந்தது, மிரட்டப்பட்டு தான் எப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது என்பது குறித்தும் கணவர் குமாரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார் அப்பெண்..
இதுகுறித்து குமார் மேலும் கூறும்போது, “ இந்த விவகாரம் எனக்கு தெரிந்த உடனேயே என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என் பெற்றோர்கள் தான் இந்த விவகாரத்தை தேவலாயத்திடமே எழுப்பலாம் என ஆலோசனை தந்தனர். அதன்படி தேவாலய தலைமையிடம் என் மனைவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தேன். அவர்கள் என் புகாரை பெற்றுக் கொண்டாலும் முறைப்படி அதில் முடிவு எடுக்க முயற்சிக்கவில்லை. எனவே இதுதொடர்பான விரக்தியில் இருந்தநான் இதுகுறித்து என் நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியபடி என் மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தேன். அவர் நான் பேசிய ஆடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாலேயே இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் தேவாலயத்திற்கு எதிராக ஒருபோதும் நான் செயல்படவில்லை. புகாரை வாபஸ் பெறும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. எனது மனைவி எனக்கு மறுபடியும் வேண்டும். அவரின் இடத்தில் வேறு யார் ஒருவரையும் அதில் வைத்து என்னால் பார்க்க முடியாது” என கூறியுள்ளார்.
Courtesy: TheNewsMinute