நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்: கத்துவா சிறுமி தரப்பு வழக்கறிஞர்
காஷ்மீரில் 8-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனக்கு கொலைமிரட்டல் வருவதாக சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உட்பட 8பேரை போலீஸார் கைது செய்தனர். குற்றவாளிக்கு ஆதரவாக பிப்ரவரி மாதம் காஷ்மீரில் தேசியக்கொடியுடன் மிகப்பெரிய அளவில் பேரணி நடைப்பெற்றது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒரு வழியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுமி தரப்பில் தீபிகா ராஜாவத் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
இந்நிலையில் தனக்கு கொலைமிரட்டல் வருவதாக வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் தெரிவித்துள்ளார். நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம். நான் கொல்லப்படலாம். எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம் என சிலர் மிரட்டல் விடுக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தீபிகா, ஜம்மூ காஷ்மீர் பார் அசோசியேசன் தலைவரால் மிரட்டப்பட்டேன் என்றார். நான் ஜம்மூ பார் அசோசியேசனில் உறுப்பினராக இல்லை. இருப்பினும் என்னை தொடர்புகொண்ட அந்த நபர், இந்த வழக்கில் இருந்து விலகுமாறு தெரிவித்தாகக் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஜம்மூ பார் கவுன்சிலிடம் விசாரித்ததில், வழக்கறிஞர்கள் ஏப்ரல் 3ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதனால் அவரை இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர்.