'நானும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுறேன்; அதை யாராலும் தடுக்க முடியாது' - மேகாலயா பாஜக தலைவர்

'நானும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுறேன்; அதை யாராலும் தடுக்க முடியாது' - மேகாலயா பாஜக தலைவர்
'நானும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுறேன்; அதை யாராலும் தடுக்க முடியாது' - மேகாலயா பாஜக தலைவர்

தங்கள் கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் கூறியிருக்கிறார் மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி.

பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜகவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் மேகாலயா பாஜக மாநிலத் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு எர்னஸ்ட் மாவ்ரி அளித்த பேட்டியில், "மேகாலயாவில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். நானும் சாப்பிடுகிறேன். நாங்கள் எங்கள் சொந்த உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். அதற்கு எந்த தடையும் இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. பாஜக எந்தக் காரணத்தைக் கொண்டும், சாதி, மதம், பழக்கவழக்கங்கள் குறித்து சிந்திக்காது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிரான நிலைப்பாடு குறித்து நான் கருத்து கூறமுடியாது. நாங்கள் மேகாலயாவில் இருக்கிறோம். இங்குள்ள பழக்கவழக்கங்களை தொடர்கிறோம். அவ்வளவுதான்.

மேகாலயாவில் பெரிய பெரிய கசாப்புக் கூடங்கள் உள்ளன. அங்கே மாடு, பன்றி இறைச்சிகள் சுதந்திரமாக விற்கப்படுகிறது. பாஜக கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான கட்சி என்று சில அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் வெறும் அரசியல் பிரசாரம் மட்டுமே. நாட்டில் 9 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. நாட்டில் எந்த இடத்திலும் ஒரு தேவாலயம் கூட தாக்கப்படவில்லை. மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அனைவரும் தேவாலயங்களுக்கு செல்கிறார்கள்.

கிறிஸ்தவ மக்கள் அதிகமுள்ள கோவா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு இதுவரை ஒரு தேவாலயம் கூட தாக்கப்படவில்லை. பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பரப்பி வருகின்றன. இது பொய் பிரசாரம். நானும் ஒரு கிறிஸ்தவன்தான். என்னிடம் யாருமே சர்ச்சுக்குப் போகக்கூடாது என்று சொன்னதில்லை. மேகாலயாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என்று கூறினார்.

மேகாலயாவில் வரும் 27-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான முதல்வா் கான்ராட் சங்மா தேசிய மக்கள் கட்சியுடனான மோதல் போக்கைத் தொடா்ந்து, கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் பாஜக தனித்துக் களம் காண்கிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையும் தனித்தனியாக போட்டியிட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com