'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்

'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்

''இதுவரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் நிச்சயம் அதை சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்?'' என்று ஆவேசமாக கூறியுள்ளார் சித்தராமையா.

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, துமகுரு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மத வெறுப்புணர்வு மற்றும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆவேசமாகப் பேசினார். ''நான் ஒரு இந்து. இதுவரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் நிச்சயம் அதை சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆதிதிராவிடர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். அதனால் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தி இருப்பது சரியல்ல. சட்டசபையில் கூட இதை நான் சொல்லியிருக்கிறேன், மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சக மனிதர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்கள்" என்று  சித்தராமையா கூறினார்.

சித்தராமையாவின் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் சலவாதி நாராயணசாமி, ''சித்தராமையா மாட்டு இறைச்சியை சாப்பிட விரும்பினால் சாப்பிடட்டும். ஆனால் அதற்கு அவர் வக்காலத்து வாங்கக் கூடாது. இறைச்சி சாப்பிட்டு கோவிலுக்கு சென்றவர் சித்தராமையா. அதை நியாயப்படுத்தினார். சித்தராமையா எப்போதும், பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சிக்கிறார். மேலும் பாஜவுக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை தூண்டி விடுவதும் அவரது வழக்கம்'' எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஏற்கெனவே பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளபோதும், அதில் குற்றம் செய்வோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி கர்நாடகாவில் பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும். சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: குதுப் மினார் விவகாரத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை: மத்திய அமைச்சர் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com