ஹைதராபாத்: விரும்பியபடி ப்ளவுஸ் தைத்து தராததால் கணவருடன் சண்டையிட்டு மனைவி தற்கொலை?
ஹைதராபாத்தில் தையல் தொழிலாளியான கணவர், தனது விருப்பப்படி ப்ளவுஸ் தைத்து தராததால் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள அம்பர்பேட் பகுதியில் உள்ள கோல்நக திருமலா நகரில் கணவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பள்ளி செல்லும் இரு குழந்தைகளுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். ஸ்ரீநிவாஸ் வீடு வீடாகச் சென்று புடவைகள் மற்றும் ப்ளவுஸ் பொருட்களை விற்றும், வீட்டில் துணிகளை தைக்கும் தொழில் செய்துவந்தார். அவர் நேற்று விஜயலட்சுமிக்கு ப்ளவுஸ் தைத்து கொடுத்ததாகவும், ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
பள்ளி சென்றிருந்த குழந்தைகள் வீடு திரும்பிய பிறகு அறையின் கதவை தட்டியபோது அது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக ஸ்ரீநிவாஸும் வீட்டுக்கு வந்து கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக அம்பர்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.சுதாகர் கூறுகையில், 36 வயதுடைய பெண் விஜயலட்சுமி தற்கொலைக் குறித்து கடிதம் எழுதாததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்