மனைவி பிரிந்து சென்றதால் கோபம்: பல பெண்களை ஏமாற்றி தொடர்கொலை செய்த சைக்கோ கில்லர்!
ஹைதராபாத்தில் இளம்வயதிலேயே திருமணத்தை மீறிய உறவால் தன்னைவிட்டு மனைவி பிரிந்துசென்ற கோபத்தால் பெண்களை ஏமாற்றி கடத்திச்சென்று கொலை
செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் தேதி காவாலா ஆனந்தையா என்ற நபர் தனது மனைவி காவாலா வெங்கடம்மா டிசம்பர் 30ஆம் தேதி காணாமல் போய்விட்டதாக ஜூபிலி ஹில்ஸ் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் ஜனவரி 4ஆம் தேதி வெங்கடம்மாவின் சடலம் அன்குஷ்புர் கிராமத்தில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே கிடந்ததை
கத்கேசார் போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர்.
போலீஸார் அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளி பாலியல் உறவுக்காக வெங்கடம்மாவை ஆள் நடமாட்டமில்லாத
பகுதியில் இருந்து கூட்டிச் சென்றது தெரியவந்தது. அங்கிருந்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்குஷ்புர் கிராமத்தின் ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு
அழைத்துச் சென்றதும் சிசிடிவி காட்சிகளின்மூலம் தெரியவந்தது. போதையில் இருந்த ராமுலு, வெங்கடம்மாவை கொலைசெய்துவிட்டு அவருடைய நகைகளை
பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.
மேலும் அதே நபர் சைபராபாத் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாலா நகர் பகுதியில் டிசம்பர் 10ஆம் தேதி அடையாளம் தெரியாத மற்றொரு பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்ததும் தெரியவந்தது. அந்தப் பெண்ணை சித்திபெட் மாவட்டத்தின் சிங்க்யபல்லி கிராமத்திற்கு
கூட்டிச்சென்று அவருடைய புடைவையை வைத்தே கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அந்த பெண் அணிந்திருந்த வெள்ளிநகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து
தப்பிச் சென்றுவிட்டார்.
யார் இந்த கொலையாளி என்பதை கண்டுபிடிக்க ஹைதராபாத் வடக்குபகுதி போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த நபர் சங்கா ரெட்டி
மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான மைனா ராமுலு என்று தெரியவந்தது. இந்த இரண்டு கொலைகளுக்கு முன்பே 2003 முதல் 2019க்கு இடைபட்ட காலத்தில் ராமுலு 16
கொலைகளில் ஈடுபட்டு ஆயுள்தண்டனை பெற்றவர் என்றும், ஆனால் 2011, டிசம்பர் 12ஆம் தேதி சிறையிலிருந்து எர்ரகட்டா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து
சென்றபோது மற்ற 5 குற்றவாளிகளுடன் சேர்ந்து தப்பித்துச் சென்றதும், வெளியே சென்ற ராமுலு மேலும் 5 கொலைகளில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்
மீண்டும் 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு ஹைதராபாத்தின் போரபண்டா பகுதியில் பதுங்கியிருந்த ராமுலுவை போலீஸார் கைது செய்தனர். ராமுலு ஏன்
தொடர்கொலைகளில் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தை கண்டறிய அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் 21 வயதில் பெற்றோரால் பார்த்து திருமணம் செய்து
வைக்கப்பட்ட தனது மனைவி திருமணத்தை மீறிய உறவால் வேறொருவருடன் சென்றுவிட்டதாகவும், ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாததால் ராமுலுவுக்கு
பெண்கள்மீது வெறுப்பு ஏற்பட்டதாகவும், எனவே திருமணத்திற்கு பிறகு தவறான உறவில் ஈடுபடும் பெண்களை கடத்திச்சென்று கொலை செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே ராமுலுவின் இதேபோலத்தான் இருந்ததாகவும், அவர் மனநிலையில் இன்றுவரை மாற்றம் ஏற்படவில்லை எனவும்
தெரிவித்திருக்கின்றனர்.