’பிச்சைக்காரன்’ ஸ்டைலில் நிஜ சம்பவம்: ஐதராபாத்தில் பிச்சை எடுத்த ’கிரீன் கார்ட்’ பெண்!
அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கிய பெண் ஒருவரும், எம்.பி.ஏ படித்துவிட்டு லண்டனில் பணியற்றிய பெண்ணும் ஐதராபாத்தில் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக ஐதராபாத்தை மாற்றும் முயற்சியில் அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களை பிடித்து அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இல்லத்தில் அடைத்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் ஐதராபாத் லாங்கர் தர்கா அருகே பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 30 பெண்களை பிடித்தனர். அதில் 50 வயதுள்ள பர்ஸானா, 44 வயதுள்ள ரபியா பஸிரா ஆகிய இரண்டு பெண்கள் ஸ்டைலாக ஆங்கிலம் பேசியதைக் கண்டு போலீசாரும் இல்ல நிர்வாகிகளும் ஆச்சரியமடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் ரபியா, எம்.பி.ஏ படித்தவர் என்றும் லண்டனில் அக்கவுண்டட்டாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. உறவினர்கள் பூர்வீக சொத்துகளை பறித்துக்கொண்டதால் பிச்சை எடுத்து வாழ்வதாகக் கூறியுள்ளார். அவர் சொன்ன தகவலை அடுத்து லண்டனில் உள்ள அவர் மகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதை அவரும் உறுதிபடுத்தினார்.
50 வயது பர்ஸானா, அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்றவர். கணவரை இழந்த அவர் சில பிரச்னைகளை சந்தித்தார். பின்னர் சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி ஐதராபாத் வந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். ’விஜய் ஆண்டனி’ நடித்த ’பிச்சைக்காரன்’ படத்தில் அம்மாவின் உயிரைக் காக்க, சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி பிச்சை எடுப்பார் ஹீரோ விஜய் ஆண்டனி. அதைப் போல இந்த பெண் செய்துள்ளார். இந்தப் பெண்ணின் மகன் அமெரிக்காவில் ஆர்க்டெக்காக இருக்கிறார்.
இதையடுத்து இந்தப் பெண்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.