ஐதராபாத்தில் 6 ஏபிவிபி உறுப்பினர்கள் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத் நாராயண்குடாவில் உள்ள நாராயணா கல்லூரியில் நுழைந்த சில ஏபிவிபி உறுப்பினர்கள், கல்லூரியின் பொது மேலாளர் அலுவலகத்தில் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். நாராயணா கல்லூரியின் பொது மேலாளர் ஜெய் சிம்ஹா ரெட்டி, நாராயணா பள்ளியின் முன்னாள் முதல்வரான ஸ்ரீலதாவை பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாகக் கூறி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர்.
வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி உறுப்பினர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 148 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக நாராயண்குடா காவல் நிலைய ஆய்வாளர் கூறினார்.
இதுகுறித்து ஏபிவிபி உறுப்பினர் கூறும்போது, ஸ்ரீலதாவை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே அவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை சாதாரணமாக நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. ஏபிவிபியினர் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இரு தனிநபர்களுக்கிடையே நடந்த உரையாடலை வைத்தே அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பாகாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

