“எல்லா மதத்தினரும் வாருங்கள்” - வரவேற்கும் ஐதராபாத் மசூதி
ஐதரபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் அனைத்து மதத்தினரும் பார்வையிட அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிக்கைக்கு மறுநாளான நேற்று ‘திறந்த மசூதி’ (open mosque) திட்டத்தை தொழுகை ஏற்பாட்டு குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி பல்வேறு மத நம்பிக்கையை கொண்டுள்ளவர்கள் மசூதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மசூதிக்குள் எப்படி தொழுகை செய்கிறார்கள் என்பதை பார்வையிடவும், இஸ்லாமின் அடிப்படை தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், இஸ்லாம் மத்தினருக்கும் மற்றவர்களுக்கும் நல்ல உறவை மேம்படுத்தவும் இந்த நடமுறையை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்த அறிவிப்பை அடுத்து இந்து, கிறிஸ்துவம், சீக்கியம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்கள் இந்த மசூதிக்குள் பார்வையிட்டு வருகின்றனர். பெண்களும் பலர் வருகின்றனர். மசூதிக்குள் பார்வையிட வருபவர்களுக்கு எப்படி தொழுகை செய்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மசூதியின் உட்புறம் எப்படி இருக்கும், அங்கு என்ன நடக்கும் என்பதை பலரும் அறிந்து கொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்று மசூதி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஐதராபாத்தை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அனுராதா ரெட்டியும் அந்த மசூதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். மசூதிக்குள் தொங்கவிடப்பட்டிருந்த வரைபடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியவர் இதுபோன்ற முயற்சிகள் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே புரிதலை ஏற்படுத்த உதவும் என்று கூறினார்.
‘திறந்த மசூதி’ என்பது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் என்று முறை ஆகும். ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஐதரபாத்தில் தற்போது முதன்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.
courtesy - The News Minute