அமெரிக்காவில் யாசகம் எடுக்கும் இந்தியப் பெண்... மத்திய அரசின் உதவியை கோரும் தாய்!

அமெரிக்காவில் முதுகலை படிக்கச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், தெருவில் யாசகம் எடுக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது தாய் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.
சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, ஜெய்சங்கர்
சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, ஜெய்சங்கர்ட்விட்டர்

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி. இளம்பெண்ணான இவர், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலைக்கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில், 2 மாதங்களாக அவரது தாய் சையதா வஹாஜ் பாத்திமாவால் மகளை தொடர்புகொள்ள முடியாமல் இருந்துள்ளார். இதனால் அதிக கவலையில் இருந்த அவருக்கு சமீபத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

அதன்படி சமீபத்தில் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் பாத்திமாவை தொடர்புகொண்டு, “உங்களுடைய மகள் மனஅழுத்தத்தில் உள்ளார். அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், உணவு வாங்கக்கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார். சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார்” எனக் கூறியுள்ளனர்.

சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி
சையதா லுலு மின்ஹாஜ் ஜைதிட்விட்டர்

இதுபற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள பாத்திமா, தனது மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கலீகுர் ரகுமான் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார்.

தன் கடிதத்தில் பாத்திமா, ”தெலங்கானாவில் உள்ள மவுலா அலியில் வசிக்கும் எனது மகள் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, கடந்த ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு டெட்ராய்டில் உள்ள TRINE பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்காகச் சென்றார். தொடர்ந்து எங்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டிருந்தார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக, அவள் எங்களுடன் தொடர்பில் இல்லை.

எனது மகள் மனஉளைச்சலில் இருப்பதாகவும், அவளது உடைமைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும் ஹைதராபாத் இளைஞர்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின் சிகாகோ சாலைகளில் என் மகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதில், இந்திய தூதரகம் தலையிட்டு தனது மகளை இந்தியா அழைத்து வருமாறு வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com