“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்
மனைவி மற்றும் குழந்தைகளை கடன் வாங்கியாவது பராமரிப்பதுதான் கணவரின் கடமை என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கணவர் தனக்கு பராமரிப்பு செலவுக்காக வழங்க வேண்டிய 91,000 பணத்தை இதுவரை கொடுக்கவில்லை என முறையிட்டிருந்தார். இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு 12 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அந்த இளைஞர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில் மனைவிக்கு உரிய பராமரிப்பு தொகை வழங்காதபட்சத்தில் அதிகப்பட்சமாக ஒரு மாதமே சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட முடியும் என அந்த இளைஞர் முறையிட்டார். இந்த மனு நீதிபதி மதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அந்த இளைஞரின் மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் கணவரின் முதல் மற்றும் முன்னணி கடமையே மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பதே என தெரிவித்தார். இதற்காக ஒருவேளை அந்த இளைஞர் யாசகம் செய்யலாம். அல்லது கடன் வாங்கலாம் ஏன் திருட கூட செய்யலாம் என குறிப்பிட்ட நீதிபதி அத்தியாவசிய தேவைகளுக்காகவே கைவிடப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பராமரிப்பு தொகை வழங்கப்படுவதாக தெரிவித்தார். கணவரால் கைவிடப்பட்ட மனைவி மற்றும் குழந்தைகள் பணம் இல்லாமல் எப்படி தங்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் ? என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.