
உலகில் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சவால் விடும் வகையில் பெண்கள் முன்னேறினாலும், அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாள்தோறும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். அதிலும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளால் பெண்களும் சிறுமிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவது கொடூரத்தின் உச்சம். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வரதட்சணைக் கொடுமைகளாலும் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் ஒன்று, தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் நீமூச் மாவட்டத்தில் உள்ள ஜவாத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, வரதட்சணை கேட்டு தன் மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார், ராகேஷ். அதற்காக, தன் மனைவி உஷாவை கயிறு கட்டி இழுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் இறக்கியுள்ளார்.
அவர், ’தன்னை மேலே தூக்கி விடுங்கள்’ என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் ராகேஷ் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் கல்நெஞ்சத்துடன் இருந்துள்ளார். தவிர, தன் மனைவியைக் கிணற்றுக்குள் இறக்கியிருந்த வீடியோவையும் எடுத்து, அவரது மைத்துனருக்கு அனுப்பியதுடன், அவரிடம் 5 லட்சம் ரூபாய் பணமும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், கிராமத்தில் உள்ள சிலரை தொடர்பு கொண்டு தன்னுடைய மகளை காப்பாற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர். அதன்பேரில், அந்தப் பெண் கிணற்றிலிருந்து வெளியே வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின் தன் தாய் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், அங்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். அதன்பேரில் பெண் வீட்டார் ராகேஷுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட எஸ்.பி. அமித்குமார், ராகேஷை கைது செய்ய உத்தரவிட்டார். அவரைக் கைதுசெய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.