பசி காரணமாக, விவசாயி வைத்திருந்த 66 ஆயிரம் ரூபாயை அவரது வெள்ளாடு தின்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சிலுவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார் பால். விவசாயி. இவர், வீடு கட்டி வருகிறார். செங்கல் வாங்குவதற்காக 66 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே குளித்தார். அவ்வளவும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். அப்போது பசியோடு வந்த அவரது வெள்ளாடு, பாக்கெட்டில் துறுத்திக் கொண்டிருந்த கரன்சியை பார்த்தது. ஏற்கனவே பேப்பர் என்றால் அந்த வெள்ளாடு ருசியாக சாப்பிடுமாம்.இதையடுத்து கரன்சியை கடித்துச் சாப்பிடத் தொடங்கியது. வெளியே குளித்துக் கொண்டிருந்த சர்வேஸ் தற்செயலாக வீட்டுக்குள் பார்த்தால், ஆடு தின்று கொண்டிருந்தது தெரியவந்தது.வேகமாக உள்ளே வந்த அவர் ஆட்டை விரட்டினார். அது ஓடியது. பாக்கெட்டைப் பார்த்தால், 2 நோட்டுகள் மட்டுமே மிச்சமாக இருந்தது. அதுவும் நைந்து போயிருந்தது. செங்கல் வாங்க வைத்திருந்த பணம் இப்படி சின்னா பின்னமாகிவிட்டதே என அப்செட்டாகிவிட்டார் சர்வேஸ். இது கொஞ்ச நேரத்துக்குத்தான். பிறகு, சரி போனா போகுது என கூலாகிவிட்டார்.
வெள்ளாடு பணத்தை தின்றச் சம்பவம் அக்கம் பக்கம் வீட்டினருக்கு தெரிய வர, கூட்டம் கூட்டமாக வந்து நின்று அதோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
’பணத்தை சாப்பிட்ட ஆட்டைக் கொன்னுடுன்னு எல்லாரும் சொல்றாங்க. பாசக்கார அந்த ஆடு என் செல்லமாச்சே... அது என்குழந்தை மாதிரி ’ என்கிறார் சர்வேஸ்.