கூட்டத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ! நொடிகளில் வழி ஏற்படுத்திய மக்கள் - வீடியோ
கேரளாவில் சில நொடிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வழி ஏற்படுத்தி ஆம்புலன்சை அனுப்பி வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கேரளாவின் பாலக்காட்டில் ஒவ்வொரு வருடம் மார்ச் மாதத்தில் மன்னார்காட் பூரம் என்ற விழா கொண்டாடப்படுகிறது. பாலக்காட்டில் உள்ள அம்மன் கோவிலில் கொண்டாடப்படும் இந்த திருவிழா அப்பகுதியில் மிகவும் பிரபலம். இந்த விழாவில் பங்குபெறுவதற்காக கேரளாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கூடுவது வழக்கம். மக்கள் கூடி மேளதாளங்கள் இசைத்து இசைக்கு ஏற்ப நடனமாடி மன்னார்காட் பூரம் விழாவை மக்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்ட விழா சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதற்கு காரணம் விழாவில் கலந்து கொண்ட மக்களின் பாராட்டுக்குரிய நடவடிக்கை தான். நூற்றுக்கணக்கான மக்கள் கூடி ஆட்டம் பாட்டமென சாலையில் சென்று கொண்டிருக்கின்றனர். சாலையெங்கும் மனித தலைகளாக காட்சி அளிக்கும் அந்த கட்டுங்கடங்காத கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கி விடுகிறது. சில நொடிகளில் நூற்றுக்கணக்கான மக்களும் வழி ஏற்படுத்தி ஆம்புலன்சை அனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.
எத்தனை குதூகத்தில் இருந்தாலும் ஒருபோல சிந்தித்து ஆம்புலன்சுக்கு வழி விட்ட கேரள மக்களை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக வழிவிட வேண்டும் என்றும் வருவது வெறும் வாகனம் அல்ல. ஒரு உயிரின் போராட்டம் என உணர்ந்து நாம் செயல்பட வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்து அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.