கோயில்களில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி வரி உண்டா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசு கடந்த 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையால் சில பொருட்கள் மீதான வரி அதிகரித்துள்ளதால் விலையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் ரூ.20 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ள கோயில்களும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி தெலங்கானா அமைச்சர் இந்திர கரண் ரெட்டி கூறும்போது, தெலங்கானாவில் ரூ.20 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் கொண்டதாக 149 கோயில்கள் இருக்கின்றன. இதில் 16 கோயில்களுக்கு வருட வருமானம் ஒரு கோடிக்கு மேல். இதில் ஜிஎஸ்டி வரி எவ்வளவு கட்ட வேண்டும், எந்தெந்த சேவைக்கு கட்ட வேண்டும் என்கிற தெளிவான விவரம் கிடைக்கவில்லை. பிரசாதம், தரிசன கட்டணம், உண்டியல், நில வாடகை மூலம் கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது. உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி கட்ட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி தெளிவில்லை’ என்று கூறியுள்ளார்.