நாங்கள் ஏழைகள் என்று வீட்டுச் சுவரில் எழுதச் சொன்ன ராஜஸ்தான் அரசு
மானிய விலையில் ரேஷன் பொருட்களைப் பெறும் மக்களின் வீட்டுச் சுவர்களில் நான் ஒரு ஏழை என்ற வாசகத்தை எழுத அதிகாரிகள் வற்புறுத்துவதாக எழுந்த புகாரால் ராஜஸ்தான் அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தவ்சா மாவட்டத்தில் மானிய விலையில் ரேஷன் பொருட்களைப் பெறுவோரின் வீட்டுச் சுவர்களில் நான் ஒரு ஏழை என்ற வாசகத்தினை எழுத வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த வீட்டில் வசிப்பவர்கள் ஏழை என்பதாலேயே தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் வீட்டு சுவற்றில் எழுத வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் வற்புறுத்தப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அந்த வாசகங்களை எழுதிய பின்னரே தங்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், தங்களின் பொருளாதார நிலை குறித்து மற்றவர்கள் ஏளனம் செய்யும் நிலைக்கு தங்கள் ஆளாகியுள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொருளாதாரரீதியில் பின்தங்கிய 70 சதவீத மக்கள் வசிக்கும் தவ்சா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ஆளும் வசுந்த்ரா ராஜே தலையிலான பாஜக அரசு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டபோது பயனாளிகளை அடையாளம் காணும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் முறைகேடாக ரேஷன் பொருட்கள் பெறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.