மேற்கு வங்கம் | ஹுமாயூன் கபீர் - பாஜக விவகாரம்.. AIMIM தனித்துப் போட்டி!
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 தேதிகளில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் பாஜக மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மம்தா பானர்ஜியை தோற்கடிக்க ரூ.1000 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் பிரதமர் அலுவலகம் உட்பட பலர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்காவது முறையாக ஆட்சியைத் தொடர தீவிரம் காட்டும் திரிணாமுல், இதை ஜனநாயகத்துக்கு எதிரான சதியாக விளக்குகிறது.
மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வரும் தேர்தலில் வென்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைத் தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட பல கோடி ரூபாய் திட்டத்தில் பிரதமர் அலுவலகமும் (PMO) ஒரு அங்கம் வகிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில் திரிணமூல் காங்கிரசிலிருந்து நீக்க்கப்பட்ட ஹூமாயுன் கபீர், ஆம் ஜனதா உன்னயன் (Aam Janata Unnayan Party (AJUP) கட்சி என்ற கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஓவைசியின் ஏஐஎம் ஐஎம் (AIMIM) கட்சியுடன் கூட்டணி வைத்தார். திரிணமூல் காங்கிரஸ் ஹூமாயுன் கபீர் இருக்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் தான் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், சுவேந்து அதிகாரி, ஹிமந்த் பிஸ்வா சர்மா போன்ற அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்பட பாஜக கூறியதாகவும் அவர் பேசியுள்ளார்
மம்தா பானர்ஜியை தோற்கடிக்க பாஜகவிடம் ரூ.1000 கோடி திட்டம் இருப்பதாகவும் முன்பணமாக ரூ.200 கோடி பெற்றதாகவும் அவர் கூறுகிறார். மேலும் முஸ்லிம்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்றும் அவர்களின் வாக்குகளை பிரித்து பாஜகவுக்கு உதவலாம் என்று அவர் அந்த வீடியோவில் பேசுகிறார் .
இந்த வீடியோ AI ஆல் உருவாக்கப்பட்டது என்றும் நான் எந்த தலைவரையும் சந்திக்கவில்லை எனவும் மமதா பானர்ஜி கட்சி செய்யும் சதி வேலை என்றும் ஹுமாயூன் கபீர் கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து ஏஐஎம்ஐஎம் கட்சி இவருடன் இருந்த கூட்டணியை விலக்கிக் கொண்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

