‘நெருப்புடன் விளையாடாதீங்க..’ பாஜக அரசுக்கு பகீரங்க எச்சரிக்கை.. பதற்றத்தில் மேற்கு வங்கம்!
மேற்கு வங்கத்தில் பாஜக அரசின் அதிரடி நடவடிக்கைகளால், மாநிலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரிடையே கவலைகளைத் தூண்டியுள்ளது. தவிர, இவ்விவகாரம் பாஜக அரசு - இஸ்லாம் சமூகத்தினரிடையே ஒரு மோதல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும், காலை நேரக் கூட்டங்களின்போது 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்குமாறு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது. முன்னதாக, மதரஸா உள்ளிட்ட மதம் சம்பந்தமான நிதி உதவித் திட்டங்கள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும், சாலையோர தொழுகைக்கான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதுபோல், இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளுக்கும் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது, மாநிலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரிடையே கவலைகளைத் தூண்டியுள்ளது. தவிர, இவ்விவகாரம் பாஜக அரசு - இஸ்லாம் சமூகத்தினரிடையே ஒரு மோதல் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக,ரெஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ஹுமாயூன் கபீர், ’முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று அரசாங்கம் ஒரு விதியை உருவாக்கலாம், ஆனால் சடங்கு ரீதியான குர்பானி தொடரும். நாங்கள் எந்த எதிர்ப்புகளுக்கும் செவிசாய்க்க மாட்டோம். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், குர்பானி நடைபெறும். குர்ஆனில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கும். சுவேந்து அதிகாரியிடம் நான் நேரடியாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நெருப்புடன் விளையாடாதீர்கள். அது உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். குர்பானி விஷயத்தில் முஸ்லிம் சமூகம் சமரசம் செய்துகொள்ளாது’என எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா, "மக்களின் தனிப்பட்ட உணவு விருப்பங்களில் பாஜக தலையிடுவதில்லை. ஆனால் பசுக்களை வெளிப்படையாகவோ அல்லது பொது இடங்களிலோ அறுப்பதை உறுதியாக எதிர்க்கிறோம். சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால், மாநிலத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தினருக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

