ராணுவ ஜீப்பில் கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாக கட்டி இழுத்துச் செல்லப்பட்டவருக்கு, ஜம்மு காஷ்மீர் அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பிலால் நாஸ்கி கூறும்போது, “ஃபாரூக்கின் கண்ணியத்தையும், வாழ்க்கையையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளேன். ராணுவத்துக்கு உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை என்பதால் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்ரீநகரைச் சேர்ந்த ஃபாரூக் அகமது தார் என்பவரை இந்திய ராணுவத்தினர், ராணுவ ஜீப்பின் முன்பக்கம் கட்டி, அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பாட்காம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இழுத்துச் சென்றனர். ஸ்ரீநகர் தொகுதிக்கு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கலவரத்தின்போது இச்சம்பவம் நடந்தது. இந்நிலையில் ஃபாருக் அகமதுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.