
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 90 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிஷா மாநிலம் பூரியில் இருந்து புறப்பட்ட உத்கல் எக்ஸ்ப்ரஸ் ரயில் நேற்று மாலை உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இதில் 23 பேர் பலியாயினர். காயமடைந்த 90 பேர் அருகிலுள்ள முசாஃபர் நகர் மற்றும் மீரட் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மோப்ப நாய் உதவியுடன் மீட்டனர். ரயில் விபத்தின் பின்னணி குறித்து விசாரிக்க ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விபத்தின் பின்னணியில் சதிச் செயல் உள்ளதா என தீவிரவாத தடுப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். ரயில் அப்பகுதியை கடந்தபோது தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.