நாட்டின் உயரிய பத்ம விருதுகள்: நீங்களும் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?

நாட்டின் உயரிய பத்ம விருதுகள்: நீங்களும் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
நாட்டின் உயரிய பத்ம விருதுகள்: நீங்களும் விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் - பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.
மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த விருதுக்கு தகுதியானவர்களை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் பரிந்துரை செய்வர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், அதில் தகுதியானவர்களை மத்திய அரசு தேர்வு செய்து, விருதுகளை அறிவிக்கும்.
ஆனால் சமீப ஆண்டுகளாக இதுவரை அடையாளம் காணப்படாத, புகழ் வெளிச்சத்துக்குள் வராத, அதே நேரம் தங்கள் துறையில் சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திய நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 
* இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். தனக்காகவும் விண்ணப்பிக்கலாம்; பிறரையும் பரிந்துரைக்கலாம்.
* உயிரிழந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அதே நேரம், மிக தகுதி வாய்ந்த நபராக இருப்பின், அவர் இறந்து ஓராண்டு நிறைவடையாத நிலையில் அவர் பெயரை பரிந்துரைக்கலாம்.
* பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாது. மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
https://padmaawards.gov.in எனும் இணையதளம் வழியாக மட்டுமே பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாதனைகள், சிறப்பான செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட துறைகளில் புரிந்த சேவைகள் ஆகிய பாராட்டு பத்திரத்தில் குறிப்பிடுவதற்கான விவரங்களை (அதிகபட்சம் 800 வார்த்தைகள்) தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இந்த விருதுகளைப் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
பத்ம விருதுகளுக்காக பெறப்படும் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுக் குழுவுக்கு அனுப்பப்படும். இந்த குழுவுக்கு அமைச்சரவை செயலாளர் தலைமை வகிப்பார். இக்குழுவில் உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு பிரபலங்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழு தேர்வு செய்யும் பரிந்துரைகள் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அவர்கள் இறுதி செய்வார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com