OLX மூலம் ரூ.100 கோடி வரை மோசடி.. சொகுசாக வாழ்ந்த கிராமம்.. நடந்தது என்ன.?
OLX இணையதளத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கார், பைக், செல்போன் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் இந்த இணைய பக்கத்தில் கிடைக்கும். ஆனால் இது அனைத்தும் ஏற்கெனவே ஒருவர் பயன்படுத்திய பொருள் என்பதால் குறைந்த விலைக்கு அதனை நம்மால் வாங்க முடியும். Second Hand ஆக பொருட்கள் வாங்க நினைப்பவர்கள், குறைந்த விலைக்கு பொருட்களை எதிர்பார்ப்பவர்கள் இந்த இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ரூ 100 கோடி வரை மோசடி நடைபெற்றிருக்கிறது.
சரி OLX-ல் மோசடி எப்படி நடைபெற்றிருக்கிறது என்பதை பார்ப்போம்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு OLX இணையதளம் மூலம் மோசடி நடந்ததாக கூறி கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. புகார்கள் அனைத்துமே ஒரே மாதிரியான முறையில் மோசடி செய்யப்பட்டதாக வந்தது. அதாவது இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கக் கூடிய அதிகாரி ஒருவர் தான் பயன்படுத்திய புல்லட், ஜீப் உள்ளிட்டவைகளை பணியிட மாறுதல் காரணமாக விற்க விரும்புவதாக OLX இணையதளத்தில் விளம்பரம் செய்வார்.
இதனை பார்ப்பவர்கள் வாகனங்களை வாங்க சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்பு கொள்வார்கள். அப்போது, தான் ராணுவத்தில் வேலை பார்ப்பதற்கான ராணுவ அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ராணுவ வாகனத்தின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி, அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவார்.
அதன்பின் தன்னுடைய வாகனத்தை, வாங்க விரும்புவோரின் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டதாகக் கூறி அதற்கான ரசீது புகைப்படம் ஒன்றையும் அனுப்புவார். இதனால் வாகனத்தை வாங்க நினைப்பவர்கள் ஆன்லைன் மூலம் அவருக்கு அதற்கான பணத்தை அனுப்புவார்கள்.
பணத்தை அனுப்பியவர்கள் வண்டி வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் குறித்த நாளில் வண்டி வராததால், அந்த நபருக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால் அந்த நபரின் மொபைல் எண் சுவிட்ச் ஆஃப்பாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் ஏமாந்தது தெரியவருகிறது. இப்படித்தான் பல பேரிடம் மோசடி செய்திருக்கிறது இந்தக் கும்பல்.
தமிழ்நாடு, ஆந்திரா என பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மோசடி புகார்கள் குவிந்திருக்கின்றன. இதுகுறித்த புகார்கள் தமிழக போலீசாரிடம் சென்றிருக்கின்றன. அப்போது எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செல்கிறது என்பதை தேடிய சைபர் கிரைம் போலீசார், கொள்ளையர்கள் ராஜஸ்தானில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் விரைந்தது தமிழக தனிப்படை.
ஒருவார காலம் அங்கு தங்கியிருந்த போலீசார் 100 கோடி வரை மோசடி செய்த கும்பலை சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரை கைது செய்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இருவரின் கைதுக்கு கிராம மக்களே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
கிராம மக்களே ஒட்டுமொத்தமாக ஏன் எதிர்க்கிறார்கள் என்பது முதலில் காவல்துறையினருக்கு புரியவில்லை. பின்னர்தான் கொள்ளையடித்த பணத்தை துநாவல் என்ற கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் சிலரை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.