குறைந்த கொரோனா பாதிப்பு... 'மும்பை மாடல்' வெற்றி சாத்தியமானது எப்படி? - ஓர் அலசல்

குறைந்த கொரோனா பாதிப்பு... 'மும்பை மாடல்' வெற்றி சாத்தியமானது எப்படி? - ஓர் அலசல்

குறைந்த கொரோனா பாதிப்பு... 'மும்பை மாடல்' வெற்றி சாத்தியமானது எப்படி? - ஓர் அலசல்
Published on

மற்ற மாநிலங்கள் கொரோனா இரண்டாம் அலையில் சிக்கிக்கொண்டிருக்க, மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை, தங்களின் நடவடிக்கையால் சத்தமே இல்லாமல் அங்கு பாதிப்பை வெகுவாக குறைந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றியும்,`மும்பை மாடல்' எப்படி வெற்றி பெற்றது என்றும் விரிவாக பார்க்கலாம்!

மகாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவும் மாநிலம். தினமும் 55,000-க்கும் அதிகமான பாதிப்புகள் என அங்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாமல் இருந்து வந்தது. அதிலும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், ஏப்ரல் தொடக்கத்தில் தினமும் 11,000-க்கும் மேல் சென்றுகொண்டிருந்தது தினசரி பாதிப்பு. ஆனால் சமீப நாட்களாக மும்பையில் தினசரி பாதிப்பு 6,000ம் அளவுக்குகுறைந்து கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த திங்கள்கிழமை மும்பையில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,876 என்ற அளவிலேயே இருந்தது. டெல்லி, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் தலைநகர்களை கணக்கிடும்போது ஒப்பீட்டளவில் மும்பையில் பாதிப்பின் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வளவு விரைவாக இது எப்படி சாத்தியமானது என்பதற்கு அம்மாநில அதிகாரிகள், மருத்துவர்களை வழிநடத்திய மும்பையின் மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் இது தொடர்பாக பேசியிருக்கிறார். அவர், "முதலாவதாக இவை அனைத்தும் வலுவான அரசியல் ஆதரவின் காரணமாகவும், பெருமளவில் தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத்துவம் காரணமாக இது சாத்தியமானது. பிரதான எதிர்க்கட்சி தவறுகளை கண்டுபிடிக்கும் முன் அரசாங்கம் அதனை சரி செய்ய விரும்பியது. ஆளும் கூட்டணி இதனை ஒரு போராக கருதி, முழுமையாக ஆதரித்தது பணிகளை செய்தது. அடுத்து மும்பையில் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகள் (குறிப்பாக மாநகராட்சி மருத்துவமனைகளில்) போதுமான அளவு இருப்பதை உறுதி செய்தோம்.

ஏப்ரல் 17, 2021 அன்று ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குப் பிறகு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் தவித்துக்கொண்டிருக்க, மத்திய அரசின் உதவிய எதிர்நோக்கி இருந்த நேரத்தில் 168 நோயாளிகள் ஒரே இரவில் போதுமான ஆக்ஸிஜனைக் கொண்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்" என்றவர், `மும்பை மாடல்' வெற்றி குறித்து மேலும் தொடர்கிறார்.

"இந்தியா முழுவதும் எண்ணிக்கை சீராக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 20 நாட்களில் மும்பை தனது கொரோனா பாதிப்புகளை பாதிக்கு பாதியாக குறைத்துள்ளது. தேவையான மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

மும்பையின் சிறந்த நிர்வாகத்திறன் காரணமாக கொரோனா பாதிப்புகள் குறைக்கப்பட்டதை அடுத்து, இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் ஆகியவை மாநகராட்சியை வெகுவாக பாராட்டியதோடு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஒய் சந்திரசூட், கொரோனா தொடர்பான ஒரு மனுவை விசாரித்தபோது, கொரோனா தடுப்பு பணிகள் அனுபவத்தை பெறவும், கையாளவும், மும்பை மாநகராட்சியை அதிகாரிகளை தொடர்பு கொள்ள மத்திய சுகாதார செயலாளருக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

`மும்பை மாடல்’!

ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல்கள் கொடூரமான இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ராணுவத்திடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் பாதுகாப்பு சேவைகளின் பின்னணியில் இருந்து வந்த இக்பால் சாஹல் `மும்பை மாடல்'-ஐ உருவாக்க வைரஸைக் கட்டுப்படுத்த ‘வார் ரூம்கள்’ மூலம் பணியாற்றியது சுவாரஸ்யமானது. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா நெருக்கடியின் உச்சத்தில் மாநகராட்சி ஆணையராக சாஹல் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற காலகட்டங்களில் மும்பை அரசு மருத்துவமனை வார்டுகளில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி கொண்டிருந்தன. போதாக்குறைக்கு பிபிஇ கிட், கையுறைகள், சானிடைசர்கள், உடல் பைகள் வரை கிட்டத்தட்ட அனைத்தும் பற்றாக்குறையாகவே இருந்து வந்தன.

இதேபோல், மும்பையின் சேரிகளில் வசிக்கும் 3,00,000 க்கும் அதிகமான மக்கள் அந்த தருணத்தில் கொரோனா பாதிப்புகளால் அல்லல்பட்டு கொண்டிருந்தனர். இந்தநிலையில் தான் பொறுப்பேற்றதும், மருத்துவமனைகள் மற்றும் தாராவி போன்ற ஹாட்ஸ்பாட்களைப் பார்வையிட்ட ஆணையர் சாஹல் மூன்று உத்திகளில் பணியாற்றத் தொடங்கினார். 1).நோயாளிகளிடம் ஏற்பட்டுள்ள பீதியை போக்குதல், 2).வார் ரூம்களை மேம்படுத்துதல், 3).போதுமான உள்கட்டமைப்பை உருவாக்குதல் இந்த மூன்று உத்திகள் மூலம் பணியாற்றத் தொடங்கினார்.

பீதியை போக்குதல்!

கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆய்வகங்கள் நேரடியாக நோயாளிகளிடம் நேரடியாக பகிர்ந்துகொள்வது பீதிக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பகலில் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பான ரிப்போர்ட்கள் பொதுவாக மாலைக்குள் அவர்களிடம் கொடுக்கப்பட்டு வந்தன. இதன்காரணமாக அந்த தருணங்களில் மும்பை மாநகராட்சியின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அதிகமான புகார்கள் வந்துகொண்டிருந்தன. இதையடுத்து, சாஹலின் முதல் முடிவுகளில் ஒன்றாக, ஒவ்வொரு கொரோனா ஆய்வகங்களுக்கும் சோதனை முடிவுகளை நோயாளிகளுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும் சோதனை முடிவுகளை மாநகராட்சி உடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள உத்தரவிட்டார். இது தேவையில்லாத பீதியை குறைக்க உதவியது.

24 வார் ரூம்கள்!

கொரோனா சோதனை ஆய்வகங்கள் பகிர்ந்துகொள்ளும் மக்களின் சோதனை முடிவுகளை கையாள 24 வார் ரூம்களை அமைத்தார் சஹால். அதாவது மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளிலும் ஒரு வார் ரூம் என்கிற ரீதியில் அமைக்கப்பட்டன. 24 வார் ரூம்களும் தங்கள் வார்டுகளில் உள்ள நோயாளிகளின் சோதனை முடிவுகளை காலை 6 மணிக்குள் அனுப்பும். அதேபோல் ஒவ்வொரு வார் ரூம்களும் 30 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டு மையமாக இருந்தது. அதில் 10 தொலைபேசி ஆபரேட்டர்கள், 10 மருத்துவ உதவி ஊழியர்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. அவர்கள் மூன்று ஷிப்ட்களில் வேலை செய்தனர். இந்த மையங்கள் மூலமாக மருத்துவமனை படுக்கை வசதிகள் எங்கு காலியாக இருக்கிறது என்பது போன்ற முக்கிய தகவல்களும் வழங்கப்பட்டன.

ஹப்-அண்ட்-ஸ்போக் ஆபரேஷன்:

மும்பை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் 55 சோதனை ஆய்வகங்களில் இருந்து தினமும் வரும் 10,000 ரிப்போர்ட்களை பெற்று அதனை 24 வார்டுகளுக்கு அனுப்பும் மையமாக செயல்பட்டது. அதேபோல், கொரோனா பாசிட்டிவ் என அறியப்பட்ட நோயாளிகளின் மீது நேரடி கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்டு- வார் ரூமும் காலை 8 மணியளவில் கொரோனா பாதித்துள்ள மக்களின் வீடுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சகிதமாக நேரடியாக சென்று ஆய்வகங்கள் கொடுத்த முடிவுகளை வழங்கியது.

மருத்துவ பணியாளர்கள்:

மாநகராட்சி ஏற்படுத்திய இந்த வார் ரூம்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவி ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. (குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் இருந்து வெளியேறும் புதிய பட்டதாரி மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு அதிக உதவித்தொகையும் (மாதத்திற்கு ரூ .50,000) மற்றும் ஹோட்டல் தங்குமிடம் வசதிகள் வழங்கப்பட்டது. இதன்காரணமாக, மொத்தம் 900 க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் 600 நர்சிங் மாணவர்களும் நியமிக்க வழிவகுத்தது.

ஆம்புலன்ஸ்:

வழக்கமான ஆம்புலன்ஸ்களுக்கு மத்தியில், 800 க்கும் மேற்பட்ட எஸ்யூவிகளை வாங்கி அவற்றை ஆம்புலன்ஸ் வடிவில் புதுப்பிக்க உத்தரவிட்டார் சஹால். அதன்காரணமாக எஸ்யூவி வடிவ கார்கள் தற்காலிக ஆம்புலன்ஸாக மாறியது. இவை லேசான அறிகுறிகளுடன் நோயாளியை மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு போதுமானதாக இருந்தன.

கூட்டுறவு மருத்துவமனைகள்:

திறந்தவெளி மைதானங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறிய மருத்துவமனைகள் உட்பட பல ஜம்போ மையங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் மாநகராட்சி குறிப்பிட்ட கொரோனா சிகிச்சை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த கூட்டுறவு மருத்துவமனைகளில் மாநகராட்சியின் வார் ரூம்கள் மூலமாகவே நோயாளிகளை அனுமதிக்கும்படி கூறப்பட்டன. ஒவ்வொரு வார்டு குழுவும் நோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் நிலையை ஆராய்ந்து, தேவையான இடங்களில் உள்ள படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் அவர்களை அனுமதித்தன. நோயாளிகளுக்கு நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட ஏழு ஜம்போ மையங்களில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யவோ அல்லது நேரடியாக அனுமதிக்கவோ வழிவகுத்தது. இதன்காரணமாக ஆரம்பித்த குறைந்த காலங்களிலேயே இந்த மருத்துவமனைகளில் 20,000 க்கும் மேற்பட்டோர் இந்த வசதிகளைப் பெற்றனர்.

தகனம்:

இறந்தவர்களை தகனம் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டது மும்பை மாநகராட்சி. அதில் ஒன்று மும்பையின் 47 தகன மேடைகளுக்கான ஆன்லைன் போர்டல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து உருவாக்கப்பட்டு, இந்த தகன மேடைகளில் கூட்டத்தைத் தடுக்க அவர்களுக்கு கூட்டம் இல்லாமல் இருக்கும் தகன மேடைகளை ஆன்லைன் வழியாக கண்டறிந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்ததன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது மும்பை மாநகராட்சி. இதற்கு மாநகராட்சி ஆணையரும், ஆளும் அரசுகளின் ஒத்துழைப்பும் சரியாக அமைந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com