மத்திய பல்கலைக்கழகங்களில் இடைநிற்றலுக்கு உள்ளான மாணவர்கள் இத்தனை ஆயிரமா?

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஐஐடி, நாடாளுமன்றம்
ஐஐடி, நாடாளுமன்றம்கோப்புப் படம்

நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி எனப் பல்வேறு கல்வி நிறுவனங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. இங்கு எவ்வளவு மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளனார்கள் என நாடாளுமன்றத்தில் உறுப்பினரொருவர் எழுப்பிய கேள்விக்கு, எழுத்துமூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 25,593 பேர் படிப்பைப் பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள். மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடியில்தான் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது” என தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார், ”கடந்த 5 ஆண்டுகளில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக, ஐ.ஐ.டிகளில்தான் 39 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பெரும்பாலானோர் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஆவர். தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப மற்றும் மனநல பிரச்னை ஆகியவைதான் தற்கொலைக்கான காரணங்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் வகுப்புவாத சச்சரவுகளால், திறமையிருந்தும் பல எழை மாணவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியை தொடர முடியாத நிலை தொடர்கிறது. இதுமட்டுமின்றி அவ்வப்போது மாணவர்களின் தற்கொலை போன்ற சம்பவங்களும் அங்கெல்லாம் அரங்கேறி வருகின்றன.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com