தொடரும் தாக்குதல் | 100 டாலருக்குக் கீழ் கச்சா எண்ணெய் விலை.. சாத்தியமாவது எப்படி?
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானாலும் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் பெரும்பாலும் 100 டாலர்களுக்குள்ளேயே நீடிக்கிறது. விலை உயராததற்குக் காரணம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் நீரிணை முழுமையாக அடைக்கப்பட்டு தற்போது மூன்று மாதங்களுக்கும் மேலாகிறது. வளைகுடா நாடுகளிலிருந்து நாளொன்றுக்கு வரும் சுமார் 1 கோடி பீப்பாய் எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுபோனதால், வரலாற்றின் மிக மோசமான விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
தொடக்கத்தில் ஒரு பேரல் எண்ணெய் விலை 200 முதல் 300 டாலர் வரை உயரும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழாக, அதாவது 96 டாலர் என்ற அளவில் நீடித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயராததற்குக் காரணம் என்ன? இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவின் தேவை எதிர்பாராத விதமாகக் கடுமையாகக் குறைந்துள்ளது. சீனா தனது இறக்குமதியை 40 சதவீதம் வரை குறைத்துள்ளதால் சந்தையின் சுமை குறைந்துள்ளது. இரண்டாவதாக, அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிரடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள் தங்களின் அவசரகால இருப்பு எண்ணெய்யைப் பயன்படுத்தி வருவதால் தற்காலிகமாக விலை கட்டுக்குள் உள்ளது. வாரந்தோறும் 7 முதல் 8 கோடி பீப்பாய் என்ற அளவில் உலகளாவிய எண்ணெய் இருப்பு குறைந்துவரும் நிலையில் மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

