அரிசி
அரிசிFile Image

அரிசி ஏற்றுமதிக்கு தடை; இந்தியாவின் நடவடிக்கையால் உலக நாடுகளுக்கு உணவு நெருக்கடியா?-A to Z ஓர் அலசல்

மத்திய அரசின் அதிரடி தடையால் உலக நாடுகள் சிலவற்றில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், விலை உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் அரிசி!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவும் ஒன்று. அத்தகைய உணவு வகைகளில் அரிசி பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இத்தகைய அரிசியை, உலக நாடுகளில் பல நாடுகள் உணவுக்காகப் பயன்படுத்தி வருகின்றன. அரிசியில் பல வகைகள் உள்ளன. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, சிகப்பரிசி, பாசுமதி அரிசி உள்ளிட்டவை மக்களின் அதிகளவு நுகர்வு தேவையாக உள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அரசின் அதிரடி தடையால் உலக நாடுகள் சிலவற்றில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், விலை உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரிசி
அரிசிPT Web

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

பருவ மழை தாமதமாகத் தொடங்கிய பின்னர், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் (பருவமழை தாமதமாக வந்ததால் ஜூன் நடுப்பகுதிவரை பெரிய அளவில் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஜுன் கடைசி வாரத்தில் இருந்து பெய்த கனமழை பற்றாக்குறையை துடைத்தாலும், அவை பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது) என்ற அச்சத்தின் காரணமாக, மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. குறிப்பாக மேற்குவங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நெல் விதைப்பு குறைந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், உலக சந்தையில் உணவுப்பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பதற்றம் நிலவுவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால், அரிசியின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 சதவிகித ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு!

இதற்கு முன்பு, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் நொய் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டில் அதன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்தது. இதனைக் கருத்தில்கொண்டு அந்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன் புழுங்கல் அரிசியைத் தவிர, பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளுக்கும் 20 சதவிகித ஏற்றுமதி வரி விதித்தது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவின் ஏற்றுமதி தடையால், சர்வதேச சந்தையில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

தரவுகளின்படி பார்த்தால், சில்லறை விற்பனையில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 11.5 சதவிகிதம் , கடந்த மாதம் மட்டும் மூன்று சதவிகிதம் வரையும் அரிசியின் விலை உயர்ந்துள்ளது.
rice
riceகோப்புப்படம்

உலகில் 40.4 சதவிகித அரிசி தேவையைப் பூர்த்தி செய்யும் இந்தியா!

உலகின் அரிசி தேவையில் சுமார் 40.4 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்து வரும் நிலையில், தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அரிசியை ஏற்றுமதி செய்தாலும் அந்த நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். அதாவது, தாய்லாந்து 15.3%, வியட்நாம் 13.5%, பாகிஸ்தான் 6.5%, அமெரிக்கா 3.8%, மியான்மர் 3.3%, சீனா 3.2%, கம்போடியா 3.2%, பிரேசில் 2%, உருகுவே 1.6%, இதர நாடுகள் 7.2% உள்ளிட்ட சதவிகித அளவுகளில் அரிசியை ஏற்றுமதி செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஏற்றுமதியில் சாதனை படைத்த இந்தியா!

இதில் இந்தியா, சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியா, கடந்த ஆண்டு (2022) 55.4 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், 17.86 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியும், 10.3 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியும் அடங்கும். இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2022ஆம் ஆண்டில் சாதனை அளவாக 22.2 மில்லியன் டன்களை எட்டியது. இது உலகின் அடுத்த 4 (தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா) முக்கிய தானிய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியைவிட அதிகம். அத்துடன், ஆண்டுதோறும் அரிசி ஏற்றுமதி 3.5 சதவிகிதம் வளர்ச்சி காண்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாசுமதி அரிசியைப் பொறுத்தவரை கடந்த 2015 (3.7 மில்லியன் மெட்ரிக் டன்), 2016 (4,05), 2017 (3.99), 2018 (4,06), 2019 (4.41), 2020 (4.45), 2021 (4,63), 2022 (3.95) ஆகிய அளவுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பாசுமதி அல்லாத அரிசி, 2015 (8,27 மில்லியன் மெட்ரின் டன்), 2016 (6.46), 2017 (6.77), 2018 (8.65), 2019 (7.6), 2020 (5.04), 2021 (13.1), 2022 (17.26) ஆகிய மில்லியன் மெட்ரிக் டன் அளவுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், கடந்த 2022 ஜூலை மாதம் 4.1 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசி, 2023 ஜூன் மாதம் 3.8 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2022 ஜூலை ரூ. 4.1 கோடி, ஆகஸ்ட் ரூ.5.0 கோடி, செப்டம்பர் ரூ.3.9 கோடி, அக்டோபர் ரூ.3.6 கோடி, நவம்பர் ரூ.3.9 கோடி, டிசம்பர் ரூ.4.6 கோடி, 2023 ஜனவரி ரூ.4.1 கோடி, பிப்ரவரி ரூ.4.6 கோடி, மார்ச் ரூ.5.1 கோடி, ஏப்ரல் ரூ. 4.3 கோடி, மே ரூ.4.4 கோடி, ஜூன் ரூ.3.8 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

rice
ricetwitter

41 மில்லியன் டன் அளவுக்கு இருப்பு வைத்திருக்கும் இந்தியா!

இந்தியாவிற்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள்தான் உலகிற்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இவை அனைத்துமே இந்தியாவை ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவே ஏற்றுமதி செய்கின்றன. கடந்த ஜூலை 1 நிலவரப்படி, இந்தியாவில், பாசுமதி அல்லாத அரிசி 41 மில்லியன் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. இது, உள்ளூர் பொது விநியோகம் மற்றும் வெளிச்சந்தை வர்த்தகத்தை பாதிக்காத அளவு எனச் சொல்லப்படுகிறது. அதாவது, அதன் தேவையைவிட (Buffer Requirement) மூன்று மடங்கு அதிக அளவாகும். அத்துடன் பொது விநியோக திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் சுமார் 700 மில்லியன் ஏழை மக்களுக்கு அரிசியை மாதந்தோறும் இந்தியா விநியோகம் செய்து வருகிறது.

இருப்பினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியா உணவுப் பொருள் விலையேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல், உள்நாட்டுச் சந்தையில் அரிசியின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

அரிசி உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு அதிகம்!

அரிசி உற்பத்தி செய்யும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில், சீனா (14.9 கோடி மெட்ரிக் டன்) முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்தியா (12.9), வங்கதேசம் (3.6), இந்தோனேசியா (3.4), வியட்நாம் (2.7), தாய்லாந்து (1.9), பிலிப்பைன்ஸ் (1.3), மியான்மர் (1.2), பாகிஸ்தான் (0.9), ஜப்பான் (0.7) உள்ளிட்ட நாடுகள் கோடி மெட்ரிக் டன் அளவுக்கு அரிசியை உற்பத்தி செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அரிசி உற்பத்தியில் காரீப் பருவம் 85 சதவீதம் பங்கு வகிக்கிறது. 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையில் 13 கோடி டன் அளவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 ஆண்டுகளின் சராசரி உற்பத்தியைவிட 1.3 கோடி டன் அதிகமாகும்.

மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, அசாம் மற்றும் ஹரியானா ஆகியவை அரிசி உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.
rice
ricetwitter

இந்தியாவின் தடையால் எத்தகைய நாடுகளுக்குப் பாதிப்பு?

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்படாது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாசுமதி அல்லாத அரிசியை இந்தியாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யும் 50 நாடுகளில் அமெரிக்கா 34ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து ஓர் ஆண்டுக்கு 27 ஆயிரம் டன்கள் அரிசியை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. உண்மையிலேயே அரிசி ஏற்றுமதித் தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், அமெரிக்கா, நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், பெனின், கென்யா, ஐவரி கோஸ்ட், மலேசியா, வியட்நாம், ஐக்கிய அரேபிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவிரமாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நாடுகளில் ஏற்கெனவே உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உத்தரவு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அரிசியை அதிகம் நம்பியிருக்கும் நாடான நேபாளம், 4.57 லட்சம் டன்கள் அரிசியை இறக்குமதி செய்கிறது.

கியூபா, பனாமா நாடுகளில் அரிசியின் கலோரி மதிப்பு அதிகம்!

வங்கதேசம், பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் அரிசி நுகர்வு அதிகமாக உள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ் , நைஜீரியா ஆகியவை அரிசி இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாகத் திகழ்கின்றன. இந்தோனேசியா, வங்கதேசம் போன்ற நாடுகள், உள்நாட்டுச் சந்தையில் பற்றாக்குறை ஏற்படும்போது மட்டும் அரிசியை இறக்குமதி செய்யும் நடைமுறையைக் கொண்டுள்ளன. கியூபா, பனாமா போன்ற நாடுகளில் அரிசி முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது. இந்த நாடுகளில் பொதுமக்கள் ஒருநாளைக்கு உட்கொள்ளும் உணவு வகைகளில் இருந்து கிடைக்கும் மொத்த கலோரி மதிப்பில், அரிசியின் பங்கு மட்டும் 40 முதல் 67 சதவீதம் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

rice
ricetwitter

அமெரிக்காவில் அரிசி விலை உயர்வால், ‘ஒரு நபருக்கு ஒரு பை'!

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால், சர்வதேச சந்தையில் அரிசிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. உலக அளவில் அரிசியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா, தாய்லாந்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ள வியட்நாமில் அரிசியின் விலை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள இந்தத் தடை காரணமாக, அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களிலும் அரிசி விலை உயர்வைக் கண்டுள்ளது. அரிசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

மேலும், 'ஒரு நபருக்கு ஒரு பை' என்ற அளவில்தான் அரிசி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

சர்வதேச சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இந்திய அரசின் தடைக்கு முன்பு 10 கிலோ அரிசியின் விலை 20 டாலராக (ரூ.1,639) இருந்தது. தற்போது 40 டாலராக (ரூ.3,200) உயர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கு, அரிசியை வாங்குவதற்காக கடைகளின் வாசலில் நீண்டவரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்றுமதி தடையால் இந்தியாவை நம்பியுள்ள நாடுகள், மற்ற நாடுகளின் அரிசியை அதிகளவில் வாங்க நேரிடும். அவ்வாறு நடந்தால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் தட்டுப்பாடு நிலவும் எனவும் நிபுணர்கள் கணிக்கின்றனர். சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சீராக உயர்ந்து வந்த அரிசியின் விலை, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 14 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பல நாடுகளில் அரிசிக்கான இறக்குமதி செலவை அதிகரிக்க வழிவகுத்தது. அதேநேரம், பணவீக்கம் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் அரிசி வர்த்தகத்தின் செலவை உயர்த்தி உள்ளது.

rice
ricetwitter

உலக சந்தையில்ஆதிக்கம் செலுத்தும் 4 வகை அரிசிகள்!

உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசியை உணவாக பயன்படுத்துகின்றனர். மிக முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சாப்பிடப்படும் பிரதான உணவுகளில் அரிசியும் ஒன்று. உலக நாடுகள் உணவுப் பொருட்களின் தேவைக்கு ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. ஒரு நாட்டின் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி தடைபட்டால், பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள 800 கோடி மக்கள்தொகையில் 300 கோடி பேரின் பிரதான உணவாக அரிசி உள்ளது. ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் இந்தியாவில் பயிரிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் பாசுமதி, இண்டிகா, ஜபோனிகா உள்ளிட்ட நான்கு ரகங்கள்தான் உலக அளவிலான அரிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

உணவுத் தானிய தேவையைப் பூர்த்திசெய்த உக்ரைன், ரஷ்யா!

இவற்றில் குறிப்பாக ,இண்டிகா ரக அரிசி உலக சந்தையில் பெரும் பங்கு வகிக்கிறது. கொரோனா காரணமாக பல நாடுகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து முழுமையாக மீள முடியாத சூழலில் உள்ளன. மேலும் உலகின் உணவுத் தானிய தேவையில் உக்ரைனும் ரஷ்யாவும் சுமார் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்து வந்தன. கடந்த 18 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடிப்பதால், சர்வதேச அளவில் உணவுத் தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐ.நா. சபையின் பொருளாதாரத் தடையால் ரஷ்யாவின் உணவுத் தானியங்களைப் பெரும்பாலான நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

rice
ricetwitter

அரிசி தேவையில் இந்தியாவை நாடுவது ஏன்?

இதனிடையே, ஐ.நா. சபையின் சமரசத்தால், ’உக்ரைனில் இருந்து உணவுத் தானியங்களை ஏற்றுமதி செய்ய இடையூறு செய்யமாட்டோம்’ என்று ரஷ்யா உறுதியளித்தது. இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா அண்மையில் வெளியேறியது. அதோடு உக்ரைனின் முக்கியத் துறைமுகங்கள், உணவுத் தானிய கிடங்குகளைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்திவருகிறது. இதனால் உக்ரைனின் உணவுத் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கோதுமை, அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, உலக அளவில் அரிசி தேவைக்கு இந்தியாவை சார்ந்துள்ளது அதிகரித்தது. அதேநேரத்தில், தற்போது பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையால் இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

பாசுமதி அல்லாத அரிசி என்பது என்ன?

பாசுமதி அரிசியைத் தவிர, மற்ற அரிசியை பாசுமதி அல்லாத அரிசி என்பார்கள். உலகில் 10,000 அரிசி வகைகள் இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், பாசுமதி அரிசி இந்தியாவில் விளையும் மொத்த அரிசியில் 1% உற்பத்திக்குச் சமம். பாசுமதி அல்லாத அரிசி அனைத்து விதமான வடிவங்களிலும் அளவுகளிலும் வருகிறது. சில நீளமாகவும் மெல்லியதாகவும், சில குட்டையாகவும் தடித்ததாகவும், சில மணிகள் போலவும், சில உருண்டையாகவும் இருக்கும். பாசுமதி அரிசி போன்ற குணாதிசயங்கள் இவை எதிலும் இல்லை.

பாசுமதி அரிசி
பாசுமதி அரிசிட்விட்டர்

நீண்டநாட்கள் கெட்டுப்போகாத பாசுமதி அரிசி

அதேநேரத்தில், பாசுமதி எனும் வடமொழிச் சொல்லுக்கு 'நறுமணம்' என்று பொருளாகும். இந்த அரிசியில் இயற்கையாக அமைந்திருக்கும் வாசனையே இதன் பெயருக்கு காரணமாக அமைந்தது. இது அரிசிகளில், ’வாசனை திரவிய ராணி’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் வரக்கூடியது. இரண்டுமே சத்தானது, சுவையானது. இந்த அரிசி நீண்டநாட்கள் கெட்டுப்போகாத தன்மை கொண்டது. பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும். அரிசி வகைகளில் அதன் சுவையும் பிரமாதமாக இருக்கும். அதனால் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் அரிசியாக பாஸ்மதி அமைந்திருக்கிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இமயமலை பகுதிகளில் பாசுமதி அரிசி பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாசுமதி அரிசி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தானில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com