1998லேயே பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா.. இந்தியா சமாளித்தது எப்படி?
1998ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியதற்காக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இந்தியாவின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால், இந்தியா தாராளமயமாக்கல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சியடையச் செய்தது.
1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது இந்தியா. அப்போது இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் பில் கிளின்டன். அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு தண்டனையாக இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. வெளிநாட்டு உதவிச் சட்டம் 1961இன் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. ராணுவ நிதியுதவி நிறுத்தப்பட்டதுடன், அமெரிக்க அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்கள், உத்தரவாதங்கள் ரத்து செய்யப்பட்டன. தொழில்நுட்ப பரிமாற்றங்கள் தடை செய்யப்பட்ட நிலையில், சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தியாவுக்கு கடன் வழங்கவும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சூழலில், சர்வதேச கடன்கள் தாமதமானதால் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்காலிகமாக வளர்ச்சி குறைந்ததுடன், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் சற்று குறைந்தன. ஆனால், இருதரப்பு வர்த்தகம் ஒருபோதும் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த சில மாதங்களில், பொருளாதார தடைகளில் சிலவற்றை திரும்பப் பெற்றது அமெரிக்கா.
இதற்கிடையே, 1990களின் இறுதியில் தாராளமயமாக்கலை இந்தியா மேலும் வலுப்படுத்தியது. அமெரிக்கா அல்லாத வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம்10 பில்லியன் டாலர் முதலீட்டை, 2000மாவது ஆண்டுக்குள் ஈர்த்தது இந்தியா. இதன் மூலம் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு அணுசக்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியா மேம்படுத்தியது. சந்தை சீர்த்திருத்தங்கள் காரணமாக 1990களின் மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 6.5 சதவீதமாக ஆக இருந்த நிலையில், அமெரிக்கா தடை விதித்த போதும் 5.8 சதவீதமாக நிலையாகவே இருந்தது. 2003ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 7.8 சதவீதமாக வளர்ந்தது.
பின்னர் 2001ஆம் ஆண்டு ஜார்ஜ் w. புஷ் அதிபராக பொறுப்பேற்ற பின் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற்றது. இந்தியா மீது எஞ்சியிருந்த பொருளாதார தடைகளை நீக்கினார் புஷ். 1998ஆம் ஆண்டை போலவே, தற்போதும் இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதி தொழிலை நிச்சயம் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதியில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?.... பொறுத்திருந்து பார்க்கலாம்...