வெள்ள மீட்பு பணிக்கு சென்றவர் மீது விழுந்த திருட்டு பழி - நடந்தது என்ன?
வேகமாக பரவிய போலி செய்தியால் அப்பாவி ஒருவருக்கு தவறான முத்திரை குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரளாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு, வெள்ளம், மழை நீர் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படித்தான் தற்காலிக நிவாரண முகாமில் தங்கியிருந்த ஓமனக்குட்டன் என்பவர், சமீபத்தில் அனைத்து சேனல்களிலும் காட்சி அளிக்கத் தொடங்கினார். அதாவது அதற்கு முந்தைய நாள் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்ற அறியப்பட்ட ஓமனக்குட்டன், போலி செய்தியால் மோசடி நபர் என்ற அவப்பெயருக்கு உள்ளானார்.
அதாவது முகாமில் தங்கியிருந்த ஏழை மக்களிடம் இருந்து அவர் பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் தங்கியிருக்கும் சமூக மண்டபத்திற்கு தேவையான மின் கட்டணங்கள் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான பணத்தை செலுத்த, ஏழை மக்களிடம் இருந்து பணத்தை எடுத்ததாக ஓமனக்குட்டன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார்கள் போலீசாருக்கு சென்ற நிலையில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்தனை தொலைக்காட்சிகளும் ஓமனக்குட்டனை மோசடிக்காரர் என்றே அழைக்க ஆரம்பித்தது.
சம்பவத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராயாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சரான சுதாகரன், அந்த நிவாரண முகாமிற்கு சென்று ஒமனக்குட்டனை கண்டிக்கவும் செய்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பத்திரிகையாளர் மது என்பவர், ஓமனக்குட்டன் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்பதை சுதாகரனிடம் சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அதனை கேட்க அவர் தயாராக இல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால், ஓமனக்குட்டன் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி வாங்கி கொண்டு வந்துள்ளார். அதற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணமாக 70 ரூபாயை தான் மக்களிடம் இருந்து பெற்று கொடுத்துள்ளார். அதனை நிவாரண முகாம்களில் உள்ள மக்களும் ஒத்துக்கொண்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த ஒரு பெண் கூறும்போது, ஆட்டோ ரிக்ஷா கட்டணத்திற்காக 70 ரூபாயைதான் ஓமனக்குட்டன் பெற்றார். 7000 ரூபாயை வாங்கவில்லை என உறுதிபட தெரிவித்தார்.
மீடியாவின் இரண்டாம் கட்ட ஆய்வில் உண்மை தெரியவந்தவுடன், ஓமனக்குட்டன் மீது பதிவு செய்த வழக்கை போலீசார் திரும்பப்பெற்றனர். அத்துடன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதும் திரும்பப்பெறப்பட்டது. இதுகுறித்து ஓமனக்குட்டன் கூறும்போது, தற்போது உண்மை தெரியவந்துள்ளதால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர் எனக் கூறினார். தவறான செய்திகளை வெளியிட்டதற்காக சில சேனல்களும் ஓமனக்குட்டனிடம் வருத்தம் தெரிவித்துள்ளன.
Courtesy: TheNewsMinute