”டெலிவரி பாய்ஸா? இந்த லிஃப்ட்ல போகாதீங்க” - மார்டன் பாகுபாடும்.. நெட்டிசன்ஸின் கொதிப்பும்!
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு எதிராக குடியிருப்புவாசிகள் பலரும் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்கள் தங்களது அப்பார்ட்மென்ட்டில் உள்ள லிஃப்டில் செல்லக் கூடாது நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த போஸ்ட்டில், ஸ்விக்கி, ஸொமெட்டோ உட்பட எந்த டெலிவரி ஊழியர்களும் லிஃப்டை பயன்படுத்தக் கூடாது என இந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "No Caption" எனக் குறிப்பிட்டுள்ள ஐ.ஏ.எஸின் அந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கொதித்துப்போய் கமென்ட் செய்து வருகிறார்கள்.
அதில், “வீட்டு வாசலுக்கே சென்று டெலிவரி செய்வதை விடுத்து அவர்களை கீழே இறங்கி வந்து ஆர்டரை பெற்றுக்கொள்ள வைக்க வேண்டும்” என்றும், “லிஃப்டில் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு டெலிவரி செய்வதில்லை என்றும், அப்படியே ஆர்டர்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களே வந்து வாங்கிச் செல்லும்படி டெலிவரி நிறுவனங்கள் விதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இரவு, பகல், மழை, வெயில், குளிர் என எதையும் கருத்தில்கொள்ளாமல் டெலிவரி ஊழியர்கள் உணவு உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் டெலிவரி செய்யும் போது, அவர்களிடத்தில் இப்படியான பாகுபாட்டை பார்ப்பது ஏற்கத்தக்கவை அல்ல என்றும் சிலர் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்கள்.
டெலிவரி ஊழியர்கள் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது என்ற அப்பார்ட்மென்ட்டின் அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அந்த குடியிருப்பில் சர்வீஸ் லிஃப்ட் இருப்பதால் டெலிவரி பாய்ஸ் உள்ளிட்ட பிற ஊழியர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.